இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: அபிநந்தனைச் சீண்டும் பாகிஸ்தான் டிவியின் நிறவெறி விளம்பரம் 

எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள சூழ்நிலையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைச் சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று.. 
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: அபிநந்தனைச் சீண்டும் பாகிஸ்தான் டிவியின் நிறவெறி விளம்பரம் 

சென்னை: எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள சூழ்நிலையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைச் சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று நிறவெறி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.  

தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வெற்றி கண்டு இந்தியா போட்டியை முன்னேற்றப் பாதையில் துவங்கியுள்ளது.

இந்தியா தனது நான்காவது போட்டியில் பாகிஸ்தானை வருகின்ற 16-ஆம் தேதி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் சந்திக்க உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைச் சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று நிறவெறி விளமபரத்தை வெளியிட்டுள்ளது.  

பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா விமானப் படையானது பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது துல்லியத்  தாக்குதல் நடத்தியது.  இதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தன.

இதில் ஈடுபட்ட அந்நாட்டு விமானங்களை துரத்தி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய போர் விமானம் ஒன்றானது பாகிஸ்தான் நாட்டு எல்லையில் வீழ்த்தப்பட்டது. அதை இயக்கிய விமானி விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் இந்திய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தான் பிடியில் இருந்த போது அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து விடியோ ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தால் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகப் பரவியது. 

தற்போது பாகிஸ்தானில் உலகக் கோப்பை போட்டிகளை ஜாஸ் டிவி ஒளிபரப்பி வருகிறது. இதற்காக முன்னோட்டமாக அந்த டிவி விளமபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு நபர் விமானி அபிநந்தனைப் போலவே 'ஹேண்டில்பார் வடிவ' மீசையுடன சித்தரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கருப்பு நிறத்தில் இருப்பவர் போன்று ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் உடை நிறமான நீல நிற உடை அணிவிக்கப்பட்டுள்ளது. கையில் தேநீர் கோப்பையுடன் இருக்கும் அவரிடம் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு அவர் அபிநந்தனின் புகழ்பெற்ற பதிலான "I’m sorry, I am not supposed to tell you this." என்பதையே பதிலாக அழைக்கிறார்.

இறுதியில் அவரை போகச் சொல்லும் போது அவர்கள் கிண்டல் செய்வதுடன் விளம்பரம் முடிவடைகிறது.   ஒரு முக்கியமான விஷயத்தை பொறுப்புணர்வு இன்றிக் கையாண்டிருப்பதாக விமர்சித்து இணையத்தில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதை நீக்குமாறு கோரி எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com