டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர்: மேற்கிந்திய தீவுகளுடன் தொடங்கும் நடப்பு சாம்பியன் இந்தியா!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடங்குகிறது. 
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர்: மேற்கிந்திய தீவுகளுடன் தொடங்கும் நடப்பு சாம்பியன் இந்தியா!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடங்குகிறது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த 2 வருடங்கள் நடைபெறவுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 12 அணிகளில் முதல் 9 இடங்களில் இடம்பிடித்துள்ள அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் 6 அணிகளுடன் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும். ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் 2 டெஸ்ட் போட்டிகள் முதல் அதிகபட்சம் 5 டெஸ்ட் போட்டிகள் வரை அடங்கிய தொடர்களாக அமையும். மொத்தமுள்ள 6 தொடர்களில் 3 தொடர்கள் தங்கள் மைதானங்களிலும், 3 தொடர்கள் எதிரணி மைதாங்களிலும் நடைபெறும். சில அணிகள் கூடுதல் டெஸ்ட் தொடர்களிலும் பங்கேற்கின்றன. இருப்பினும் அவை இந்த சாம்பியன்ஷிப் தொடராக கணக்கெடுக்கப்படாது.

ஒவ்வொரு தொடரிலும் அதிகபட்சம் 120 புள்ளிகள் வரை வழங்கப்படும். இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும். இதில் வெற்றிபெறும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும். 

இதனிடையே, இந்தியா - மேற்கிந்திய தீவகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் கௌன்டி மைதானத்தில் ஆகஸ்டு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு போட்டிகளும், கயானாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி 3-ஆவது போட்டியும் நடைபெறவுள்ளது.

பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்டு 8-ல் கயானாவிலும், 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ட்ரினிடட்டிலும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஜமைக்காவின் சபைனா பார்க்கில் ஆகஸ்டு 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. 

இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணி தனது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டியை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தரவரிசையின் அடிப்படையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com