இந்தியா-நியூஸிலாந்து ஆட்டம் ரத்து: உலகக் கோப்பையில் மழையால் பாதிக்கப்பட்ட 3-ஆவது ஆட்டம்

பலத்த மழையால் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை கைவிடப்பட்டது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் மழையால் பாதிக்கப்பட்ட 3-ஆவது ஆட்டம் இதுவாகும்.
மழையால் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் ஏமாற்றத்துடன் குழுமியிருந்த இந்திய ரசிகர்கள்.
மழையால் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் ஏமாற்றத்துடன் குழுமியிருந்த இந்திய ரசிகர்கள்.


 பலத்த மழையால் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை கைவிடப்பட்டது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் மழையால் பாதிக்கப்பட்ட 3-ஆவது ஆட்டம் இதுவாகும்.
கடந்த 2015 உலகக் கோப்பையின் ரன்னர் நியூஸிலாந்து அணி தற்போது தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2 வெற்றிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புதன்கிழமை இரவு முதலே நாட்டிங்ஹாமில் தொடர்ந்து மழை பெய்தது.
விடாமல் பெய்த கனமழை: வியாழக்கிழமை அதிகாலையிலும் மழை பெய்த நிலையில், மைதான பராமரிப்பாளர்கள் பிட்ச்களை மூடினர். பின்னர் சிறிது நேரத்தில் மழை நின்றதும், உறைகளை அகற்றி, மைதானத்தை உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மீண்டும் கனமழை பெய்ததால், மீண்டும் பிட்ச்சை மூட நேர்ந்தது.
நடுவர்கள் மைதானத்தின் தன்மையை சோதிக்க வாய்ப்பு இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. இதனால் டாஸ் போடப்படாமலும், ஒரு பந்து கூட வீசப்படாமலும் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. முதலில் மேற்கொள்ளப்பட இருந்த நடுவர்கள் சோதனையும் நிறுத்தப்பட்டது. பார்வையாளர்களும் பொறுமையை இழந்து மைதானத்தை விட்டு வெளியேறினர். இதற்கிடையே இரண்டாவது முறையாக இந்திய நேரப்படி 7 மணிக்கு மேற்கொள்ளப்படவிருந்த சோதனை 30 நிமிடங்கள் தாமதமாக செய்யப்பட்டது.
2 அணிகளுக்கு தலா 1 புள்ளி: இதையடுத்து 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் நியூஸிலாந்து முதலிடத்திலும், 5 புள்ளிகளுடன் இந்திய அணி 3-ஆவது இடத்திலும் உள்ளன. ஏற்கெனவே 2 நாள்களுக்கு முன்பு வானிலை மையம் சார்பில் பலத்த மழை பெய்யும். எனினும் உணவு இடைவேளைக்கு பின் மழை நின்று விடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கன மழை நிற்காமல் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
16-இல் பாகிஸ்தானுடன் மோதல்: அடுத்து இந்தியாவுக்கு மிக முக்கியமாக பரம வைரியான பாகிஸ்தானுடன் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.

விராட் கோலி: மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது அதிருப்தியாக உள்ளது. மைதானம் ஆட பாதுகாப்பாக இல்லாத நிலையில் வீரர்களுக்கு காயம் தான் ஏற்படும். இக்கட்டத்தில் வீரர்களின் பாதுகாப்பே முக்கியம். 2 வெற்றிகளுக்கு அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்துக்கும் 2 கட்ட பயிற்சி மேற்கொண்டால் நன்றாக இருக்கும். ஷிகர் தவன் விரைவாக குணமடைவார் என நம்புகிறோம்.

கேன் வில்லியம்ஸன்: கடந்த 4 நாள்களாக நாட்டிங்ஹாமில் உள்ளோம். ஆனால் ஒருநாள் கூட சூரியனையே பார்க்கவில்லை. மழை நிற்கும் என காத்திருப்பது வெறுப்பை தருகிறது. தற்போது போட்டியின் மத்தியில் நுழைந்துள்ளோம். இந்த ஓய்வால், அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். ஒவ்வொரு ஆட்டமும் 
கடினமாகவே உள்ளது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com