மழையால் கைவிடப்பட்ட 3 ஆட்டங்கள்: ரசிகர்களுக்கு அதிருப்தி
By பா.சுஜித்குமார் | Published On : 14th June 2019 01:00 AM | Last Updated : 14th June 2019 01:00 AM | அ+அ அ- |

அணிகளுக்கு சிக்கல்
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இதுவரை ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டதால் அணிகளுக்கு சிக்கலும், பார்வையாளர்களுக்கு அதிருப்தியும் ஏற்பட்டுள்ளன.10 அணிகள் பங்கேற்கும் இதில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ரசிகர்கள் வேதனை
ஒரு பந்து கூட வீசாமல் ரத்தாகும் ஆட்டத்துக்கு தொகையை ஐசிசி திரும்பி வழங்குகிறது. எனினும் பெரும்பாலான ரசிகர்கள் மூன்றாம் தரப்பு மூலம் அதிக தொகைக்கு டிக்கெட்டை வாங்கியுள்ளோம். இதனால் தொகையே கிடைக்காமல் போய்விடும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு அதிக தொகை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தனர்.
புதிய சாதனை
கடந்த 1992, 2003 உலகக் கோப்பைகளில் 2 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போது அவற்றை முறியடிக்கும் வகையில் 2019 உலகக் கோப்பையில் மழையால் 3 ஆட்டங்கள் முழுமையாக கைவிடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டம்
இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் மழை பெய்ததால் டக்வொரத் லீவிஸ் முறையில் 41 ஓவர்களில் 187 ரன்கள் வெற்றி இலக்காக ஆப்கனுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இலங்கை- பாகிஸ்தான் ஆட்டம்
ஜூன் 7-ஆம் தேதி இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. ஒரு பந்து கூட வீசாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டு 2 அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து தரப்பட்டன.
தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான் ஆட்டம்
கடந்த ஜூன் 10-ஆம் தேதி பாக்.-தென்னாப்பிரிக்க அணிகள் பங்கேற்ற ஆட்டம் 7.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 29/2 ரன்களோடு இருந்தது அந்த அணி. அதன் பின் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு 2 அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து தரப்பட்டது.
ஏற்கெனவே 3 தோல்வியோடு தவித்து வந்த தென்னாப்பிரிக்க அணிக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்து 6 ஆட்டங்களில் வென்றால் தான் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் மழையால் கைவிடப்பட்ட ஆட்டத்தால் அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா- நியூஸிலாந்து
வியாழக்கிழமை நடைபெறவிருந்த இந்திய-நியூஸிலாந்து அணிகள் இடையிலான ஆட்டமும் ஒரு பந்து கூட வீசாத நிலையில் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. புள்ளிகளும் பகிரப்பட்டன.
மாற்று நாள் ஆட்ட கோரிக்கை
ஒரு குரூப் பிரிவு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கு அடுத்த நாள் மாற்று நாளாக (ரிசர்வ்) கொண்டு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக வங்கதேச பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்ஸும் அதிருப்தியை வெளியிட்டார்.
இதுபோன்ற பெரிய போட்டிகளில் மாற்றுநாள் முறையை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த ஐசிசி தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்ஸன்: இங்கிலாந்தில் தற்போது வழக்கமான வானிலை நிலவவில்லை. சராசரி மழையளவை விட 2 நாள்களில் கூடுதலாக பெய்துவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் மாற்று நாள் முறை வைத்திருப்பது போட்டியின் நாள்களை அதிகப்படுத்தி விடும். இதனால் பிட்சை தயார்படுத்துவது, அணிகள் பயணம், தங்கும் வசதி, மைதானம் கிடைத்தல், நடுவர்கள், ஒளிபரப்பு போன்றவை பாதிக்கப்படும் என்றார்.