இந்தியா 6-0 பாகிஸ்தான்: பாகிஸ்தானுடன் நாளை மோதல்: ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?

உலகக் கோப்பை போட்டியில் பாக். மீது ஆதிக்கத்தை தொடருமா இந்தியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா 6-0 பாகிஸ்தான்: பாகிஸ்தானுடன் நாளை மோதல்: ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?

உலகக் கோப்பை போட்டியில் பாக். மீது ஆதிக்கத்தை தொடருமா இந்தியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே உள்ள மோதல், பாகிஸ்தான்-இந்தியா இடையிலான ஆட்டங்களும் பரபரப்புக்கு பெயர் பெற்றவை. ஒரு நாள் ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி கூடுதல் வெற்றிகளைப் பெற்றுள்ளது. கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் 2 அணிகளும் பல்வேறு முக்கிய வரலாற்று சிறப்பு மிக்க ஆட்டங்களில் ஆடியுள்ளன.

மொத்த ஆட்டங்கள் - 131
இந்தியா வென்றது - 54 
பாகிஸ்தான் வென்றது - 73
முடிவில்லாதது - 4


உலகக் கோப்பையில் இந்தியா ஆதிக்கம் அதே நேரத்தில் உலகக் கோப்பை போட்டிகளை பொருத்தவரை இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  1992 உலகக் கோப்பையில் 43 ரன்கள் வித்தியாசத்திலும், 1996 உலகக் கோப்பையில் 39 ரன்கள் வித்தியாசத்திலும், 1999 உலகக் கோப்பையில் 47 ரன்கள் வித்தியாசத்திலும், 2003 உலகக் கோப்பையில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2011 உலகக் கோப்பையில் 29 ரன்கள் வித்தியாசத்திலும், 2015 உலகக் கோப்பையில் 76 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்தியா. 6-0 என்ற கணக்கில் இந்திய வெற்றிப் பயணம் உள்ளது.

சீரான பேட்டிங், பந்துவீச்சு

கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி தொடர்ந்து வலிமையுடன் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும், பும்ரா நம்பர் ஒன் பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வருகின்றனர். ரோஹித் சர்மா, கோலி, ராகுல், தோனி, ஹார்திக் பாண்டியா, ஆகியோருடன் பேட்டிங் வரிசை வலிமையாகவே உள்ளது.பந்து வீச்சும் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட மும்மூர்த்திகளாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சஹல் ஆகியோராலும் எதிரணிக்கு சவால் விடும் வகையில் உள்ளது. 

கணிக்க முடியாத பாகிஸ்தான்

அதே நேரத்தில் பாகிஸ்தான் கணிக்க முடியாத அணி என பெயர் பெற்றுள்ள பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகளிடம் மோசமான தோல்வியைத் தழுவியது. பின்னர் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வென்றது. ஆனால் நடப்பு சாம்பியன் ஆஸி.யை வெல்ல வாய்ப்பிருந்தும் 41 ரன்கள் வித்தியாசத்தில் 
தோல்வியுற்றது.

கேப்டன் சர்பராஸ் அகமது, பாபர் ஆஸம், முகமது ஹபீஸ், இமாம் உல் ஹக், ஷோயிப் மாலிக், ஃபகர் ஸமான் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். முகமது ஆமிர், ரியாஸ், ஹாரிஸ் சோஹைல், முகமது ஹஸ்னைன், ஆஸிப் அலி ஆகியோர் பந்துவீச்சில் தங்கள் பணியை செய்து வருகின்றனர்.

ஆக்ரோஷமாக ஆட வேண்டும்: சச்சின்

பாக். பந்துவீச்சாளர் முகமது ஆமிருக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். ஷாட் பால்கள் கிடைத்தால் அவற்றை வலுவாக எல்லைக்கோட்டுக்கு அனுப்ப வேண்டும். அனைத்து அம்சங்களிலும் இந்தியா ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். நாம் நம்பிக்கையுடன் காணப்பட்டால், பந்துவீச்சாளருக்கு குழப்பம் உண்டாகும்.

அனுபவம் வாய்ந்த விராட் கோலி, ரோஹித் சர்மாவை துரிதமாக அவுட்டாக பாக். அணி முயற்சிக்கும். ஆமிர், வஹாப் ரியாஸ், அவர்களது விக்கெட்டை வீழ்த்த போராடுவர் என்றார்.

மழை பெய்ய வாய்ப்பு

இந்திய-பாக். ஆட்டத்தின் போது, இரண்டாம் பாதியில்  மழை பெய்யலாம் என வானிலை நிலையம் கணித்துள்ளது. மான்செஸ்டர் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 8 மணி வரை லேசான மழை பெய்யும். பின்னர் 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சூரியன் தென்படும். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை லேசான மழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றி பெறுமா பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் ஆதிக்கமே தொடருமா என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோனியிடம் டிக்கெட் பெற்ற பாக். ரசிகர்

இந்திய-பாக். ஆட்டத்தைக் காண முன்னாள் கேப்டன் தோனியிடம் இலவசமாக டிக்கெட்டை பெற்றுள்ளார் பாக். ரசிகர் முகமது பஷீர்.

கராச்சியில் பிறந்த பஷீர் (63) அமெரிக்காவின் சிகாகோவில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 2011 உலகக் கோப்பை அரையிறுதி முதல் தோனிக்கும் அவருக்கும் இடையிலான தோழமை தொடங்கியது. இந்த ஆட்டத்தை நேரில் காண பெரும் தொகை கொடுத்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கி உள்ளனர். அதே நேரத்தில் பஷீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனினும் அவருக்கு இலவசமாகவே டிக்கெட் வாங்கித் தந்துள்ளார் தோனி.

சக வீரர்களுக்கு தோனியை தொடர்பு கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. ஆனால் பஷீர் எப்போது தொடர்பு கொண்டாலும், அவரை காக்க வைப்பதில்லை. அவரை நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசமாட்டேன். எஸ்எம்எஸ் மூலமே தகவல்களை பரிமாறுவோம். 2011 உலகக் கோப்பையிலும், இதே போல் எனக்கு டிக்கெட்டை பெற்றுத் தந்தார் தோனி. அத்தகைய சிறந்த மனிதர் அவர் என்றார் பஷீர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com