ஆப்கானிஸ்தான் படுதோல்வி: இங்கிலாந்து 397/6

ஆப்கானிஸ்தான் படுதோல்வி: இங்கிலாந்து 397/6

ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.


ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
முதலில் ஆடிய  இங்கிலாந்து 397/6 ரன்களை குவித்தது.  பின்னர் ஆடிய ஆப்கன் 247/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ்-பேர்ஸ்டோ களமிறங்கினர். வின்ஸ் 26 ரன்களுடன் தெளலத் ஸட்ரன் பந்தில் வெளியேறினார். 

பேர்ஸ்டோ-ஜோ ரூட் அரைசதம் 
அதன் பின் பேர்ஸ்டோ-ஜோ ரூட் இணை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்த பேர்ஸ்டோ தனது 11-ஆவது ஒருநாள் அரைசதத்தையும், ஜோ ரூட் 32-ஆவது அரை சதத்தையும் பதிவு செய்தனர். 
3 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 99 பந்துகளில் 90 ரன்களுடன் பேர்ஸ்டோவும், 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 82 பந்துகளில் 88 ரன்களுடன் ஜோ ரூட்டும், முகமது நபி பந்துவீச்சில் அவுட்டாயினர்.

மோசமான பீல்டிங்
ஆப்கன் அணியினர் மோசமான பீல்டிங் செய்தும், பல்வேறு முக்கிய தருணங்களில் கேட்ச்களை தவற விட்டதும், இங்கிலாந்து ரன் குவிப்புக்கு எளிதாக உதவியது.

32 சிக்ஸர் சாதனை
உலகக் கோப்பையில் முதன்முதலாக ஆப்கன்-இங்கிலாந்து இடையிலான இந்த ஆட்டத்தில் 32 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைக்கப்பட்டது.

கேப்டன் மொர்கன் விஸ்வரூபம் 
முதுகுவலியால் முந்தைய ஆட்டத்தில் பங்கேற்காமல் இருந்த கேப்டன் இயான் மொர்கன், ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட உடல்தகுதி பெற்றார். இந்நிலையில் ஆப்கன் பந்துவீச்சை பதம் பார்த்த அவர் 17 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 71 பந்துகளில் 148 ரன்களை குவித்து, முகமது நபி பந்துவீச்சில் வெளியேறினார்.
அதன்பின் அதிரடி வீரர்களான ஜோஸ் பட்லர் 2, பென் ஸ்டோக்ஸ் 2 என சொற்ப ரன்களுடன் வெளியேறினர். 
மொயின் அலி 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 9 பந்துகளில்  31 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மொத்தம் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 397 
ரன்களை குவித்தது இங்கிலாந்து.
ஆப்கன் தரப்பில் தெளலத் ஸட்ரன் 3-85, குல்பதீன் நைப் 3-68 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

110 ரன்கள் வழங்கிய ரஷித் கான்
ஆப்கன் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிகபட்சமாக 9 ஓவர்களில் 110 ரன்களை வாரி வழங்கினார். 
மொத்தம் 11 சிக்ஸர்களை அடிக்க உதவினார் ரஷித் கான்.  ஒரு நாள் வரலாற்றில் பாக். வீரர் வஹார் ரியாஸ் அதிக ரன்கள் வாரி வழங்கி சாதனை படைத்தார். அதற்கு அடுத்து ரஷித் கான் 2ஆவது இடத்தில் உள்ளார்.


ஆப்கன் தடுமாற்றம்...
398 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆப்கன் அணி சார்பில் கேப்டன் குல்பதீன் நைப்-நூர் அலி ஸட்ரன் களமிறங்கினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் டக் அவுட்டானார் நூர் அலி. 
பின்னர் குல்பதீன்-ரஹ்மத் ஷா இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 37 ரன்களை எடுத்த குல்பதீனை வெளியேற்றினார் மார்க் உட். பொறுமையாக ஆடி வந்த ரஹ்மத் ஷா 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 
இதைத் தொடர்ந்து ஹஸ்மத்துல்லா ஷாஹிதி-அஷ்கர் ஆப்கன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். அஷ்கர் 44 ரன்களுடன் ஆதில் ரஷித் பந்தில் அவுட்டானார். அப்போது 42-ஆவது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை ஆப்கன் அணி எடுத்திருந்தது. ஹஸ்மத்துல்லா மட்டுமே நிலைத்து ஆடி 100 பந்துகளில் 76 ரன்களை விளாசி அவுட்டானார்.
ஆப்கன் அணியில் முகமது நபி 9, நஜிபுல்லா ஸட்ரன் 15, ரஷித் கான் 8 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். 
இறுதியில் 50 ஓவர்களில் 247/8 ரன்களை சேர்த்தது ஆப்கானிஸ்தான்.
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3-52, ஆதில் ரஷித் 3-66 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

சுருக்கமான ஸ்கோர்
இங்கிலாந்து: 397/6
மொர்கன் 148, பேர்ஸ்டோ 90,
பந்துவீச்சு: குல்பதீன் 3-68.
ஆப்கானிஸ்தான்: 247/8,
ஹஸ்மத்துல்லா 76,
பந்துவீச்சு: ஆதில் ரஷித் 3-66

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com