தோனி, ஜாதவ் பேட்டிங் திருப்திகரமாக இல்லை: சச்சின் டெண்டுல்கர்
By Raghavendran | Published On : 23rd June 2019 02:26 PM | Last Updated : 23rd June 2019 02:26 PM | அ+அ அ- |

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ் பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தப் போட்டி எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. 34 ஓவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு வெறும் 119 ரன்கள் தான் எடுத்துள்ளோம். இந்த இடத்தில் இந்திய அணி தடுமாறியது கண்கூடாகத் தெரிகிறது. இதில் நேர்மறை ஆட்டம் தென்படவே இல்லை.
38-ஆவது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்த பின்பு ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது 2 முதல் 3 பந்துகளில் நாம் ரன்குவிக்க தவறிவிட்டோம். 45-ஆவது ஓவருக்கு பின்பு தான் சிறிது ரன்கள் சேர்ந்தது. நடுவரிசை வீரர்கள் போதிய அளவு களத்தில் விளையாட வாய்ப்பு அமையாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் ஆட்டத்திறன் சரியான வெளிப்பாடாக இல்லை.
குறிப்பாக தோனி, ஜாதவ் ஜோடி ஆட்டமுறை திருப்திகரமாக இல்லை. அவர்கள் ரன்குவிப்பு ஆமை வேகத்தில் இருந்தது என்று விமர்சித்தார்.
இந்தப்போட்டியில் தோனி, ஜாதவ் ஜோடி 84 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தது. இதில், தோனி 36 பந்துகளில் 24 ரன்களும், ஜாதவ் 48 பந்துகளில் 31 ரன்களும் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.