முரளி விஜய் அபார சதம்: டி20 ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி!
By எழில் | Published On : 02nd March 2019 05:56 PM | Last Updated : 02nd March 2019 05:56 PM | அ+அ அ- |

சூரத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மேஹாலயா அணிக்கு எதிராக தமிழக அணியின் முரளி விஜய் சதமடித்துள்ளார்.
தமிழக அணி முதலில் விளையாடிய இந்த ஆட்டத்தில் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் முரளி விஜய். கடந்த 3 டி20 ஆட்டங்களிலும் அவர் தொடர்ச்சியாக அரை சதம் எடுத்துள்ளார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இதையடுத்து அதிரடி ஆட்டத்தின் மூலம் விரைவாக சதமடித்தார் முரளி விஜய். தமிழக அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 67 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தமிழக வீரர்களில் டி20 சதமடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். வாஷிங்டன் சுந்தர் 53 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் போட்டி மார்ச் 23 முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த முரளி விஜய் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி நல்ல ஃபார்மை எட்டியுள்ளார். இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையடுத்து விளையாடிய மேஹாலயா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இதனால் தமிழக அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எனினும் குரூப் பி பிரிவில் 16 புள்ளிகளுடன் தமிழக அணிக்கு 4-ம் இடமே கிடைத்துள்ளது. விதர்பா 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது. குஜராத், ஹிமாசல பிரதேசம், தமிழ்நாடு ஆகிய அணிகள் 16 புள்ளிகள் பெற்றிருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் குஜராத் அணி நாக் அவுட் சுற்றுத் தகுதி பெற்றுள்ளது.