2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓசேனியா நாடுகள் இணைப்பு

சீனாவின் ஹாங்ஷு நகரில் வரும் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் முதன்முறையாக ஓசேனியா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓசேனியா நாடுகள் இணைப்பு

சீனாவின் ஹாங்ஷு நகரில் வரும் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் முதன்முறையாக ஓசேனியா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் வழங்கியுள்ளது.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு என விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1952-இல் முதன்முறையாக ஆசியப் போட்டிகள் புது தில்லியில் நடத்தப்பட்டன.
தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் இப்போட்டிகள் நடைபெறும் நகரங்களை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தேர்வு செய்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் உலகளவில் நடத்தப்படும் பெரிய போட்டியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அமைந்துள்ளன.
ஆசியப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளன. 
இந்நிலையில் பாங்காக்கில் அண்மையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி 2022 போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும், அதே நேரத்தில் முதன்முறையாக ஓசேனியா நாடுகள் எனப்படும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பசிபிக் பெருங்கடல் தீவுகள், உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. 
சீனாவின் ஹாங்ஷு நகரில் 2022-இல் செப்டம்பர் 10 முதல் 25-ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஓசேனியா நாடுகள் கலந்து கொள்கின்றன.
ஆஸ்திரேலிய அணி நீச்சல், தடகளம், உள்ளிட்டவற்றில் வலிமையான அணியாகும். ஹாங்ஷூ ஆசியப் போட்டியில் வாலிபால், பீச் வாலிபால், வாள்சண்டை, கூடைப்பந்து, கால்பந்து, போன்றவற்றில் ஓசேனியா நாடுகள் பங்கேற்கலாம். ஆனால் ஆஸி. பலமாக உள்ள நீச்சல், டிராக் சைக்கிளிங் போன்றவற்றில் பங்கேற்க முடியாது. ஆஸ்திரேலிய அணி கடந்த 2006 முதலே ஆசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியில் பங்கேற்றுள்ளது. மேலும் கிழக்கு ஆசிய போட்டிகள், ஆசிய குளிர்கால போட்டிகளிலும் ஆஸி. அணி பங்கேற்றுள்ளது.
35 விளையாட்டுகளில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில், ஆஸி. அணியும் குறிப்பிட்ட அளவுக்குக்கே ஆடவர், மகளிர் அணிகளை அனுப்ப முடியும்.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கோட்ஸ் கூறியதாவது: 
கடந்த 20 ஆண்டுகளாக ஆசியப் போட்டியில் ஓசேனியா நாடுகளை சேர்க்க வேண்டும் என கோரி வருகிறோம். தற்போது தான் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
நீண்ட காலமாக ஆசியப் போட்டியில் ஓசேனியா நாடுகள் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. தற்போது இதற்கு அனுமதி தரப்பட்டுள்ளதின் மூலம் இரு கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் இணைந்து விளையாட்டு அனுபவங்களை பெறலாம். எனினும் ஆஸி. அணி ஆதிக்கம் செலுத்தகூடிய நீச்சல், டிராக் சைக்கிளிங், போன்றவற்றில் பங்கேற்க அனுமதி இல்லாததால், ஆசிய நாடுகள் தொடர்ந்து அவற்றில் பதக்கங்களை வெல்லலாம்.
வாலிபால், பீச் வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, வாள்சண்டை போன்றவற்றில் கடும் போட்டி நிலவக்கூடும். இதனால் மினி ஒலிம்பிக்ஸ் எனப்படும் ஆசியப் போட்டிகள் மேலும் களை கட்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com