3-வது டி20 ஆட்டத்தில் 1 ரன்னில் தோற்ற இந்திய மகளிர் அணி!

3-வது டி20 ஆட்டத்தில் 1 ரன்னில் தோற்ற இந்திய மகளிர் அணி!

அட, இந்த ஆட்டத்திலுமா தோற்றுவிட்டார்கள் என்று ஏமாற்றமடைய வைத்துவிட்டது இந்திய மகளிர் அணி...

அட, இந்த ஆட்டத்திலுமா தோற்றுவிட்டார்கள் என்று ஏமாற்றமடைய வைத்துவிட்டது இந்திய மகளிர் அணி.

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் 1 ரன்னில் தோற்றுள்ளது இந்திய மகளிர் அணி. இதையடுத்து இங்கிலாந்து அணி டி20 தொடரில் 3-0 என முழுமையான வெற்றியை அடைந்துள்ளது.

குவாஹாட்டில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து அணி. அனுஜா பாட்டீல், ஹர்லீன் தியோல் சிறப்பாகப் பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

எளிதான இலக்கு என்பதால் இந்த டி20 ஆட்டத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தமுறையும் இந்திய வீராங்கனைகள் பேட்டிங்கில் சொதப்பினார்கள். கேப்டன் மந்தனா மட்டும் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மிதாலி ராஜ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார். ஆனால் வேறு எந்த வீராங்கனையும் உருப்படியாக ரன்கள் சேர்க்காததால் இந்திய அணி தோல்வியடைய நேர்ந்தது. 

கடைசி 60 பந்துகளில் இந்திய அணிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் மந்தனா ஆட்டமிழந்தபிறகு நிலைமை மோசமானது. அடுத்த 4 ஓவர்களில் ஒரு பவுண்டரியும் அடிக்கமுடியவில்லை. மிதாலி ராஜ் மட்டும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. மிதாலி ராஜும் ஃபுல்மாலியும் களத்தில் இருந்தார்கள். ஆனால் ஆறு பந்துகளில் நான்கு பந்துகளை எதிர்கொண்ட ஃபுல்மாலி ஒரு ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்தப் பந்தில் அனுஜா பாட்டீல் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணிக்குக் கடைசிப் பந்தில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் ஷிகா பாண்டேவால் ஒரு ரன் மட்டுமே எடுக்கமுடிந்தது. கடைசி ஓவர் முழுக்க ஒரு பந்தையும் எதிர்கொள்ள முடியாமல் மறுமுனையில் இருந்தார் மிதாலி ராஜ். இதனால் களத்தில் மிதாலி இருந்தும் தேவையான 3 ரன்களைக் கடைசி ஓவரில் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது இந்திய மகளிர் அணி.

இதன்மூலம் டி20 தொடரை 3-0 என முழுமையாக வெற்றியடைந்துள்ளது இங்கிலாந்து மகளிர் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com