சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்த ஆவணப்படம்: பரபரப்பூட்டும் தோனியின் பேட்டி!

நான் ஒரு மிகப்பெரிய குற்றம் செய்யமுடியும் எனில் அது கொலை அல்ல, மேட்ச் ஃபிக்ஸிங்...
சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்த ஆவணப்படம்: பரபரப்பூட்டும் தோனியின் பேட்டி!

ஐபிஎல் (2019) 12-ஆவது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ஆம் தேதி நடக்கவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது. 

கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சூதாட்ட புகார் தொடர்பாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கிய நிலையில் 2018- ஐபிஎல் சீசனில் பங்கேற்ற சென்னை 7-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கெனவே 2010, 2011-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வருட ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே வென்றது குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து இதுவரை எதுவும் பேசாத தோனி, இந்த ஆவணப்பபடத்தில் சில கருத்துகளைக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. டிரெய்லரில் தோனியின் பேட்டியில் ஒரு சில பகுதிகள் வெளியாகியுள்ளன. அதில் - நான் ஒரு மிகப்பெரிய குற்றம் செய்யமுடியும் எனில் அது கொலை அல்ல, மேட்ச் ஃபிக்ஸிங் என்று தோனி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்ச் ஃபிக்ஸிங்கில் அணியின் பங்களிப்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது. நானும் குற்றம்சாட்டப்பட்டேன். எல்லோருக்கும் அது கடினமான காலம். எங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை கடுமையானது என எண்ணினார்கள் ரசிகர்கள். மீண்டும் ஐபிஎல்-லில் விளையாட வந்தது உணர்வுபூர்வமானத் தருணம். நான் எப்போதும் சொல்வதுபோல, எது உங்களைக் கொல்லாதோ, அது உங்களைப் பலசாலியாக்கும் என்று பேசியுள்ளார் தோனி. 

‘Roar of the Lion’ என்கிற சிஎஸ்கே குறித்த ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் மார்ச் 20 அன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com