சுடச்சுட

  

  ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா: கடைசி ஆட்டத்தில் இந்தியா தோல்வி

  By DIN  |   Published on : 14th March 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aus

  வெற்றிக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணியினர்.


  இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பான கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. 
  தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்களுக்கு வீழ்ந்தது.
  ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் காஜா 100 ரன்கள் விளாசினார். இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.
  இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவில் யுவேந்திர சாஹலுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக முகமது ஷமியும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷுக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸும், ஜேசன் பெஹ்ரென்டார்ஃபுக்குப் பதிலாக நாதன் லயனும் அணியில் இணைந்திருந்தனர்.
  முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்யத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் காஜா-கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் களம் கண்டனர். இதில் ஃபிஞ்ச் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
  தொடர்ந்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அதிரடியாக ஆட, ஆஸ்திரேலியா ஸ்கோர் உயர்ந்தது. காஜா 102 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட சதமடித்தார். அந்த ரன்களுடனேயே அவர் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார்.
  அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன்னுக்கு வெளியேற்றப்பட்டார். மறுமுனையில் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்திருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 52 ரன்களுக்கு அவுட்டானார்.
  பின்னர் வந்தவர்களில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 20, ஆஷ்டன் டர்னர்  20, அலெக்ஸ் கேரி 3, ரிச்சர்ட்சன் 29, பேட்ரிக் கம்மின்ஸ் 15 ரன்களில் வெளியேற, கடைசியாக நாதன் லயன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3, ஜடேஜா 2, முகமது ஷமி 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் சாய்த்தனர். 
  இந்தியா தடுமாற்றம்: பின்னர் 273 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா மட்டும் 4 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் அடித்தார். அடுத்தபடியாக புவனேஷ்வர் குமார் 46 (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்), கேதார் ஜாதவ் 44 (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) ரன்கள் அடித்தனர். 
  எஞ்சியவர்களில் தவன் 12, கோலி 20, ரிஷப் பந்த் 16, விஜய் சங்கர் 16, ஷமி 3, குல்தீப் 8 ரன்களுக்கு வெளியேற, ஜடேஜா டக் அவுட்டானார். பும்ரா ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.
  ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸம்பா 3, பேட்ரிக், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸ் தலா 2, நாதன் லயன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

  ரோஹித் 8000
  இந்த ஆட்டத்தில் 56 ரன்கள் எடுத்த இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8010 ரன்களை தொட்டுள்ளார். இந்த சாதனையை அவர் தனது 206-ஆவது ஒருநாள் போட்டியில் எட்டியுள்ளார்.
  இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேக 8000 ரன்கள் அடித்த 3-ஆவது வீரர் என்ற பெருமையை முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப் பட்டியலில், விராட் கோலி முதலிடத்திலும் (175 இன்னிங்ஸ்கள்), தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 2-ஆவது இடத்திலும் (182) உள்ளனர்.

  சுருக்கமான ஸ்கோர்
  ஆஸ்திரேலியா
  50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272
  காஜா-100, பீட்டர்-52, ரிச்சர்ட்சன்-29
  பந்துவீச்சு: புவனேஷ்வர்-3/48, ஜடேஜா-2/45, ஷமி-2/57
  இந்தியா
  50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237
  ரோஹித்-56, புவனேஷ்வர்-46, ஜாதவ்-44
  பந்துவீச்சு: ஸம்பா-3/46, ஸ்டாய்னிஸ்-2/31, கம்மின்ஸ்-2/38

      கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா வென்றுள்ள முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அதேபோல், ஒரு தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்து, பிறகு அந்தத் தொடரை ஒரு அணி கைப்பற்றுவது இது 5-ஆவது நிழ்வாகும்.
      கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரை இந்தியா இழப்பது இது முதல் முறையாகும். அந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவிடம் தொடரை இழந்த இந்தியா, அதன் பிறகான தொடர்களில் வெற்றிநடை போட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
      இந்திய அணி, ஒருநாள் தொடரில் 2-0 என்ற முன்னிலையில் இருந்த பிறகும் இவ்வாறு தொடரை இழப்பது இது 2-ஆவது முறையாகும். உலகளவில் இவ்வாறு 2-ஆவது முறையாக ஒருநாள் தொடரை இழந்துள்ள ஒரே அணி இந்தியா ஆகும்.
      தில்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடந்த 37 ஆண்டுகளில் 250 ரன்களுக்கு கூடுதலான இலக்குகளை இந்தியா எட்டியதில்லை. கடைசியாக 1982-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 278 ரன்களை சேஸ் செய்து வென்றது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai