சுடச்சுட

  

  சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ஹாட்ரிக்; காலிறுதியில் ஜுவென்டஸ்

  By DIN  |   Published on : 14th March 2019 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ronaldo

  ஹாட்ரிக் கோலடித்த மகிழ்ச்சியை வழக்கமான பாணியில் கொண்டாடும் ரொனால்டோ


  சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் ஜுவென்டஸ் அணி, அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. 
  அட்லெடிகோ மாட்ரிட்டுக்கு எதிரான 2-ஆவது பகுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்து, ஜுவென்டஸ் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
  இந்த ஆட்டத்தில் ஜுவென்டஸ் 3-0 என்ற வென்றது. முதல் பகுதி ஆட்டத்தில் அந்த அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தபோதும், இரு ஆட்டங்களையும் சேர்த்து 3-2 என்ற கோல் சராசரி அடிப்படையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
  இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்ற 2-ஆவது பகுதி ஆட்டத்தில் ரொனால்டோ 26 மற்றும் 49-ஆவது நிமிடங்களில் தலையால் முட்டி கோலடித்தார். அட்லெடிகோ தனது முதல் கோலுக்கே போராடி வந்த நிலையில், ஆட்டத்தின் 86-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், ராக்கெட் வேகத்தில் பந்தை கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார் ரொனால்டோ.
  இறுதியில் ஜுவென்டஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜுவென்டஸில் இணைந்த பிறகு ரொனால்டோ அடித்த முதல் ஹாட்ரிக் கோல் இதுவாகும். அதேவேளையில், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இது ரொனால்டோவின் 8-ஆவது ஹாட்ரிக் கோலாகும். இதன்மூலம் அவர் லயோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல் கணக்கை சமன் செய்துள்ளார்.
  சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஜுவென்டஸ் 2005-06-க்குப் பிறகு முதல் பகுதி ஆட்டத்தில் தோல்வி கண்டு, காலிறுதிக்கு முன்னேறுவது இது முதல் முறையாகும். 
  முன்னதாக, முதல் பகுதி ஆட்டத்தின்போது அட்லெடிகோ அணி பயிற்சியாளர் டியேகோ சிமியோன், ஜுவென்டஸ் அணியை சீண்டும் வகையில் செய்கைகள் காட்டினார். இந்நிலையில், இந்த 2-ஆவது பகுதி ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அவரைப் போலவே ரொனால்டோ செய்கைகள் காட்டி சீண்டினார். சிமியோனின் செயலுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், ரொனால்டோவின் இந்த பதில் சீண்டலுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai