இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா தோல்வி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா தோல்வி


இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், முன்னதாக ஜோகோவிச்சும், ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரிபரும் செவ்வாய்க்கிழமை மோதிய 3-ஆவது சுற்று ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. சிறிது இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் கோல்ஷ்ரிபர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சியளித்தார்.
ஜோகோவிச்-கோல்ஷ்ரிபர் இத்துடன் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், கோல்ஷ்ரிபருக்கு இது 2-ஆவது வெற்றியாகும். அதேபோல், உலகின் முதல்நிலையில் இருக்கும் வீரர் ஒருவரை கோல்ஷ்ரிபர் வீழ்த்துவது இது முதல் முறையாகும். தோல்விக்குப் பிறகு ஜோகோவிச் கூறுகையில், கோல்ஷ்ரிபருடன் முதலில் ஆடியதற்கும், மழைக்குப் பிறகு ஆடியதற்கும் இடையேயான சூழலில் முற்றிலுமாக வித்தியாசம் இருந்தது. கோல்ஷ்ரிபருக்கு வாழ்த்துகள். நுட்பமாக ஆடிய அவர், சாதகமான சூழலில் இருந்து எனக்கு நெருக்கடியான நிலைக்கு ஆட்டத்தை நகர்த்திச் சென்றார். அவர் இந்த வெற்றிக்குத் தகுதியானவர் என்றார்.
வெற்றி குறித்து கோல்ஷ்ரிபர் கூறுகையில், இந்த ஆட்டம் ஆர்வமிக்கதாக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். அதேவேளையில், எப்போது வேண்டுமானாலும் ஜோகோவிச் மீண்டு வருவார் என்பதால், இறுதிவரை கவனமாக விளையாட வேண்டியிருந்தது என்றார். 
இரட்டையரில் வெற்றி: ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் தோல்வியடைந்திருந்தாலும், இரட்டையர் பிரிவில் அவர், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியுடன் இணைந்து அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மறுபுறம், ஒற்றையர் பிரிவின் இதர 3-ஆவது சுற்றுகளில் உலகின் 2-ஆம் நிலையில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-3, 6-1 என்ற செட்களில் ஆர்ஜெண்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தினார். 4-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-4 என்ற செட்களில் சக நாட்டவரான ஸ்டான் வாவ்ரிங்காவை தோற்கடித்தார்.
ஒசாகவுக்கு அதிர்ச்சியளித்த பெலிண்டா: இந்தியன் வெல்ஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை 
வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒசாகா 3-6, 1-6 என்ற செட்களில் உலகின் 23-ஆம் நிலையில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சிடம் 4-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார். 
தோல்விக்குப் பிறகு ஒசாகா கூறுகையில், மிகவும் ஆக்ரோஷமாக ஆடிய பெலிண்டா, வெற்றிக்கு தேவை என்ன என்பதை என்னைவிட மிகத் துல்லியமாக அறிந்திருந்தார் என்றார்.
இதர 4-ஆவது சுற்றுகளில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹேலப் 2-6, 6-3, 2-6 என்ற செட்களில் செக் குடியரசின் மார்கெட்டா வான்ட்ரோசோவாவிடம் வீழ்ந்தார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-6(7/0), 4-6, 6-2 என்ற செட்களில் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட்டை வீழ்த்தினார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-4 என்ற கணக்கில் ஜெர்மனியின் மோனா பார்தெலையும், ஜெர்மனியின் ஏஞ்ஜலிக் கெர்பர் 6-1, 4-6, 6-4 என்ற செட்களில் அரைனா சபலென்காவையும் வென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com