கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!

கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஸ்ரீசாந்த்...
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

2013-ல் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜீத் சாண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. இந்த நிலையில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து தில்லி நீதிமன்றம் கடந்த 2015 ஜூலையில் விடுவித்தது. இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஸ்ரீசாந்த்.  ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சமீபத்தில் நீக்கியது கேரள உயர் நீதிமன்றம். இதுதவிர ஸ்ரீசாந்துக்கு எதிராக பிசிசிஐ மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.  அதை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற அமர்வு, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கிய ஒரு நபர் அடங்கிய அமர்வின் உத்தரவை தள்ளுபடி செய்தது. மேலும் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையையும் உறுதி செய்தது.

கிரிக்கெட்டிலிருந்து விலக்கப்பட்டாலும் திரைப்படம், சின்னத்திரை ஆகிய துறைகளில் நுழைந்துள்ளார் ஸ்ரீசாந்த். சில மலையாள, ஹிந்திப் படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 

இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஸ்ரீசாந்த். அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். 2013-ல் ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்த பிசிசிஐயின் உத்தரவை நீக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அதேசமயம் 2013 ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்பான தில்லிக் காவல்துறையின் குற்றவியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாது என்றும் கூறியுள்ளது. ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கைக் குழு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com