ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை

ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2019 (12-ஆவது சீசன் போட்டி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை


நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2019 (12-ஆவது சீசன் போட்டி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை இரவு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையில் சிஎஸ்கேவும், இந்திய கேப்டன் கோலி தலைமையில் ஆர்சிபி அணிகளும் களமிறங்குகின்றன.
சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், பெங்களூரு இதுவரை 1 முறை கூட பட்டம் வெல்லவில்லை. கோலியும், தோனியும் எதிர்எதிரே மோதுவதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தொடக்க சீசன் முதலே செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 3 முறை பட்டம் வென்ற வெற்றிகரமான அணியாக உள்ளது. 175 ஐபிஎல் ஆட்டங்களில் தோனி மொத்தம் 4016 ரன்களை குவித்துள்ளார். இதில் 20 அரைசதங்கள் அடங்கும் (அதிகபட்சம் 79).
கடந்த 2012 முதல் பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ள கோலி 163 ஆட்டங்களில் 4948 ரன்களை விளாசியுள்ளார். இதில் 4 சதங்கள், 34 அரை சதங்களும் அடங்கும். 

சிஎஸ்கே சிறந்த ஒருங்கிணைப்பு
சென்னை அணியில் தோனி, வாட்ஸன், ரெய்னா, பிரவோ, அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், என அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளனர். பந்து வீச்சிலும் இம்ரான் தஹிர், மிச்செல் சான்ட்நர், ஜடேஜா, ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், சர்துல் தாகுல், தீபக் சஹார் மொகித் சர்மா போன்றோர் பந்துவீச்சில் எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ரெய்னா, வாட்சன், அம்பதி ராயுடு 
ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிப்பர்.


அணி முழுவதும் மூத்த வீரர்களே உள்ளதால் கடந்த சீசனில் டேட்ஸ் ஆர்மி என சிஎஸ்கே அழைக்கப்பட்ட நிலையிலும் பட்டம் வென்றது. இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து திரும்பிய சிஎஸ்கே 2018 சீசனில் 14 ஆட்டங்களில் 9-இல் வென்றது. சொந்த மைதானமான சென்னையில் இருந்து புணே நகருக்கு போட்டிகள் மாற்றப்பட்டாலும் வெற்றிப் பயணத்தை தொடர்ந்தது. முதல் பிளே ஆஃப் சுற்றிலேயே வென்று நேரடியாக இறுதிக்கு தகுதி பெற்றது. கடந்த சீசனில் ஆடிய வீரர்களில் 23 பேர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோலி-டி வில்லியர்ஸையே சார்ந்திருப்பதால் சிக்கல்
அதே நேரத்தில் பெங்களூரு அணியிலும் அதிரடி ஆட்டத்துக்கு பஞ்சமில்லால் ஆடும் கோலி, டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரன் ஹெட்மயர், ஹென்ரிச் கிலாஸன் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் உமேஷ்யாதவ், நாதன் நைல், முகமது சிராஜ், டிம் செளதி, கிராண்ட்ஹோம், வாஷிங்டன் சுந்தர், போன்றவர்கள் எதிரணிக்கு நெருக்குதல் தர வாய்ப்ப்புள்ளது.

 புதிய அதிரடி பேட்ஸ்மேன்கள்
பேட்டிங்கில் கோலி-டி வில்லியர்ஸ் ஆகியோரை நம்பியே பெங்களூரு அணி செயல்படுகிறது. இது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த முறை புதிதாக ஷிம்ரன் ஹெட்மயர், ஷிவம் துபே, ஹென்ரிச் கிளாஸன் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளது கோலி-வில்லியர்ஸின் சுமையை குறைக்கும்.
சிஎஸ்கே சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் எதிர்கொள்வது சிங்கத்தை குகையில் சந்திப்பதற்கு சமமாகும். உள்ளூர் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தோனி அணிக்கு கிடைக்கும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக காணப்படும். அதே நேரத்தில் கோலி தலைமையிலான அணி தங்கள் வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தப்போகிறது என எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

ரன்களை நோக்கி கோலி, ரெய்னா
5000 ரன்கள் என்ற சாதனை இலக்கை கோலி, ரெய்னா ஆகியோர் அடைய உள்ளனர். ரெய்னா மொத்தம் 4985 ரன்களுடனும், கோலி 4948 ரன்களுடனும் காத்திருப்பில் உள்ளனர்.

6-ஆவது இடத்தையே பெற்ற ஆர்சிபி
கடந்த 2018 சீசன் பெங்களூருவுக்கு சோகமாக அமைந்தது. 14 லீக் ஆட்டங்களில் 6-இல் மட்டுமே வென்றது. மேலும் 8 அணிகளில் 6-ஆவது இடத்தையே அதனால் பெற முடிந்தது. முந்தைய சீசனில் ஆடிய 15 வீரர்களை தக்க வைத்துள்ளது. புதிதாக 9 வீரர்கள் சேர்க்கப்பட்டனர். ஆஸி. வீரர்கள் ஸ்டாய்னிஸ், நாதன் நைல் ஆகியோர் பாகிஸ்தான் தொடர் முடிந்தே அணியில் இணைவர்.
சேப்பாக்கம் மைதான பிட்ச் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி ஆட்டத்துக்கு 12000 ரசிகர்கள் திரண்டு சிஎஸ்கேவுக்கு உற்சமாகமூட்டினர்.
ஜாம்பவான்கள் தோனி-கோலி தலைமையிலான அணிகள் நேருக்கு நேர் மோதுவதால் தொடக்க ஆட்டம் பெரியளவில் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது.

நேருக்கு நேர் மோதல்: சிஎஸ்கே ஆதிக்கம்
சிஎஸ்கே-ஆர்சிபி உள்ளிட்ட இரு அணிகளும் 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதின. இதில் சிஎஸ்கே 14, ஆர்சிபி 7 ஆட்டங்களில் வென்றன. முடிவு இல்லை-1.
கடந்த 2018 ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் தோனியின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே. சென்னையில் பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆர்சிபி 127-9 ரன்களை மட்டுமே எடுத்தது. ரவீந்திர ஜடேஜா-ஹர்பஜன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் சிஎஸ்கே அணி 2 ஓவர்கள் மீதமிருக்கையில் வெற்றிபெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டங்களில் 34 வெற்றி, 14 தோல்விகளை கண்டுள்ளது சிஎஸ்கே. அதே நேரத்தில் தான் ஆடிய 8 ஆட்டங்களில் 2-இல் மட்டுமே வென்றுள்ளது ஆர்சிபி.

லுங்கி நிகிடி காயத்தால் பின்னடைவு
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக ஆட முடியாத நிலை, சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை 26-ஆம் தேதி தொடங்குகிறது.
இரு அணிகள் இடையிலான ஆட்டம் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை தொடர்பாக சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இரண்டாவது உள்ளூர் ஆட்டம் வரும் 31-இல் நடைபெறுகிறது. டிக்கெட் விற்பனை 26-ஆம் தேதி காலை 8.45 மணி முதல் தொடங்கும். மேலும்  in.bookmyshow.com, www.chennaisuperkings.com என்ற இணையதளங்கள் மூலமும் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம். ஆன்லைன் டிக்கெட் விற்பனை காலை 8.45 மணிக்கு தொடங்கி, டிக்கெட்டுகள் விற்று தீரும் வரை நடைபெறும்.
மைதானத்தில் இதற்காக சிறப்பு கவுன்ட்டர்களும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8.45 மணிக்கு தொடங்கும் விற்பனை மாலை 6 மணிக்கு நிறைவடையும். 
(12.30 முதல் 2.00 மணிவரை உணவு இடைவேளை).
சி, டி மற்றும் இ: கீழ்தளம் ரூ.1300 (கவுன்ட்டர்களில் மட்டுமே விற்பனை), பூத் எண். 6, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு) .
சி மற்றும் இ மேல் தளம்: ரூ.2500. (கவுன்ட்டர்களில் மட்டுமே விற்பனை). பூத் எண்.3, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு).
சி, டி லெவல் 3 பாக்ஸ், ரூ.5000, ஹெச்: லெவல் 2 பாக்ஸ், ரூ.6500, பெவிலியன் மாடி, ரூ.6500, (டிஎன்சிஏ பாக்ஸ் ஆபீஸ்), எம்ஜே.கோபாலன் கேட், விக்டோரியா ஹாஸ்டல் ரோடு).


இடம்: சேப்பாக்கம் மைதானம், சென்னை.  நேரம்: இரவு 8 மணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com