தொடங்கியது ஐபிஎல் 2019: பெங்களூருவை நொறுக்கியது சென்னை

ஐபிஎல் 2019 தொடக்க ஆட்டத்தில் பெங்களூருவை நொறுக்கி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். 
தொடங்கியது ஐபிஎல் 2019: பெங்களூருவை நொறுக்கியது சென்னை

ஐபிஎல் 2019 தொடக்க ஆட்டத்தில் பெங்களூருவை நொறுக்கி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். 

சிஎஸ்கே வீரர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான தஹீர் ஆகியோர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் பொறுமையாக ஆடிய அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா ரன்களை சேர்த்து சென்னையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த 2018 சீசனில் உள்ளூர் மைதானமான சென்னையில் ஓரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே சிஎஸ்கே ஆடியது. காவிரி பிரச்னை எதிரொலியாக ஏனைய ஆட்டங்கள் புணேவுக்கு இடம் மாற்றப்பட்டன. இந்நிலையில் தற்போதைய சீசனில் அனைத்து ஆட்டங்களும் சென்னையில் நடக்கின்றன.

இந்நிலையில் ஐபிஎல் 2019  (12}ஆவது சீசன்) முதல் ஆட்டம் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே சனிக்கிழமை இரவு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை பீல்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கமே அதிர்ச்சி: பெங்களூரு தரப்பில் கேப்டன் கோலி, பார்த்திவ் பட்டேல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கோலி 6 ரன்களிலும், மொயின் அலி 9 ரன்களுக்கும் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் அவுட்டாகினர். பின்னர் பார்த்திவ் பட்டேல்}டி வில்லியர்ஸ் இணை நிதானமாக ரன்களை சேகரிக்க முயன்றனர்.

பெங்களூரு திணறல்: ஆனால் டி வில்லியர்ஸூம் 9 ரன்களுடன் ஹர்பஜன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். 

அதிரடி பேட்ஸ்மேனான ஷிம்ரன் ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் தோனி, ரெய்னாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். 

ஹர்பஜன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பெங்களுரு வீரர்கள் அடுத்து சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தஹீர் பந்தையும் எதிர்கொள்ள முடியவில்லை. ஷிவம் துபே 2 ரன்களுக்கு தஹீர் பந்தில் அவுட்டானார். 

அதைத் தொடர்ந்து ஆட வந்த காலின் டி கிராண்ட்ஹோமும் 4 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அவுட்டானார். 

இந்நிலையில் இம்ரான் தஹீர் வீசிய பந்தில் நவ்தீப் சைனி 2 ரன்களோடு அவுட்டாகி வெளியேறினார். 

அவருக்கு பின் ஆட வந்த யுஜவேந்திர சஹலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் தஹீர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

உமேஷ் யாதவ் 1 ரன்னோடு, ரவீந்திர ஜடேஜா பந்தில் போல்டானார். 

தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை ஆடி வந்த பார்த்திப் பட்டேல் 2 பவுண்டரியோடு 29 ரன்கள் எடுத்த நிலையில் பிரவோ பந்துவீச்சில் அவுட்டானார்.  17.1 ஓவர்களிலேயே 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு. 

ஹர்பஜன், தஹீர் அபாரம்: சென்னை தரப்பில் ஹர்பஜன் சிங் 3/20, இம்ரான் தஹீர் 3}9 அற்புதமாக பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா 2}15, பிரவோ 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

சென்னை ரன் குவிப்பு: 71 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் சென்னை தரப்பில் ஷேன் வாட்ஸன், அம்பதி ராயுடு களமிறங்கினர். ஆனால் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் சஹல் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் ராயுடுவுடன்}ரெய்னா இணை சேர்ந்து ரன்களை குவிக்கத் தொடங்கினர். 

3 பவுண்டரியுடன் 19 ரன்களை எடுத்திருந்த ரெய்னா, மொயின் அலி பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது 10}ஆவது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்களை சென்னை எடுத்திருந்தது. அம்பதி ராயுடு 19, கேதார் ஜாதவ் 2  ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

நிலைத்து ஆடி வந்த அம்பதி ராயுடு 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 28 ரன்களை எடுத்திருந்த போது, சிராஜ் பந்தில் போல்டானார்.

பின்னர் கேதார் ஜாதவ் 13, ரவீந்திர ஜடேஜா 6 ரன்களுடன் அவுட்டாகாமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

17.4 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 71 ரன்களை எடுத்த சென்னை இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.பெங்களூரு தரப்பில் சஹல், மொயின் அலி, சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இதன் மூலம் 12}ஆவது சீசனில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளையும் ஈட்டியது.

சுருக்கமான ஸ்கோர் 

பெங்களூரு 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு 70  
பார்த்திவ் பட்டேல் 29, 

பந்துவீச்சு: ஹர்பஜன் சிங் 3/20, இம்ரான் தஹீர் 3/9.

சென்னை 
17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 அம்பதி ராயுடு 28, சுரேஷ் ரெய்னா 19.

பந்து வீச்சு: 
சஹல் 6/1, சிராஜ் 1/5.

புல்வாமா தாக்குதல்: டிக்கெட் விற்பனை நிதி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், சென்னையில் நடைபெற்ற முதல் ஐபிஎல் ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த நிதி ரூ.2 கோடியை கேப்டன் தோனி, சிஆர்பிஎப் அதிகாரிகளிடம் வழங்கினார்.

5000 ரன்கள் கடந்த முதல் வீரர் ரெய்னா

ஐபிஎல் ஆட்டங்களில் மொத்தம் 4985 ரன்களை எடுத்திருந்த ரெய்னா ஒட்டுமொத்தமாக 5000 ரன்களை இந்த ஆட்டத்தில் கடந்து முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற சிறப்பும் ரெய்னா வசம் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com