ஐபிஎல் 2019: ஹைதராபாத்தை சாய்த்தது கொல்கத்தா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
KKR vs SRH
KKR vs SRH

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
முதலில் ஆடிய ஹைதராபாத் வார்னரின் அதிரடி ஆட்டத்தால் 181 ரன்களை எடுத்தது. பின்னர் நிதிஷ் ராணா, ஆன்ட்ரெ ரஸ்ஸல் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 183 ரன்களை எடுத்து கொல்கத்தா வென்றது. 
ஐபிஎல் 2019-இன் இரண்டாவது ஆட்டமாக இரு அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.கொல்கத்தா டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
முந்தைய சீசனில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தன. ஹைதராபாத் அணி இரண்டாம் இடம் பெற்றிருந்தது. பந்தை சேதப்படுத்திய புகாரால் விதிக்கப்பட்ட ஓராண்டு தடைக்காலம் முடிந்து ஆஸி. அதிரடி பேட்ஸ்மேன் வார்னர் மீண்டும் ஹைதராபாத் அணியில் இணைந்த நிலையில் அவருடன், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினார்.
டேவிட் வார்னர் விஸ்வரூபம்:
தொடக்கம் முதலே இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை பதம் பார்த்தனர். 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 39 ரன்களை விளாசிய பேர்ஸ்டோவ், சாவ்லா பந்தில் போல்டானார். பின்னர் வார்னருடன், தமிழக வீரர் விஜய்சங்கர் இணை சேர்ந்து அதிரடியாக ஆடினர். 3 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 85 ரன்களை வார்னர் குவித்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் அவுட்டானார். யூசுப் பதான் 1 ரன்னோடு அவுட்டானார். 
தலா 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 40 ரன்களுடன் விஜய் சங்கரும், மணிஷ் பாண்டே 8 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது ஹைதராபாத். கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல் 2-32, சாவ்லா 1-23 விக்கெட்டை சாய்த்தனர்.
182 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா தரப்பில் கிறிஸ் லீன்-நிதிஷ் ராணா ஆகியோர் களமிறங்கினர். சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கிய லீன், ஷகிப் பந்தில் 7 ரன்களுடன் அவுட்டானார். பின்னர் நிதிஷ்-ராபின் உத்தப்பா இருவரும் சேர்ந்து ரன்களை குவித்தனர்.
10-ஆவது ஓவரின் போது 70 ரன்களை கடந்தது கொல்கத்தா.
நிதிஷ் ராணா அபாரம்:
1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் உத்தப்பா 35 ரன்களை எடுத்திருந்த போது, சித்தார்த் கெளல் பந்தில் போல்டானார். அவருக்கு பின் ஆட வந்த  கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.  நிதிஷ்-ரஸ்ஸல் இணை சேர்ந்து ரன்களை சேர்த்த நிலையில், 3 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 68 ரன்களை எடுத்த நிதிஷ், ரஷித்கான் பந்தில் அவுட்டானார். 
ரஸ்ஸல் ரன் மழை: இறுதியில் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்களுடன் வென்றது கொல்கத்தா.  தலா 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 19 பந்துகளில் 49 ரன்களுடன் ரஸ்ஸலும், 2 சிக்ஸருடன் 18 ரன்களுடன் ஷுப்மன் கில்லும் அவுட்டாகாமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் சித்தார்த், ஷகிப், சந்தீப் சர்மா, ரஷித்கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். அதிரடியாக ஆடிய ஹைதராபாத் வீரர்கள் வார்னர், விஜய்சங்கர் ஆட்டம் விழலுக்கு இறைத்த நீரானது.  இந்த வெற்றி மூலம் கொல்கத்தா 2 புள்ளிகளை பெற்றது.


சுருக்கமான ஸ்கோர்
ஹைதராபாத்:
20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181,
டேவிட் வார்னர் 85, 
விஜய் சங்கர் 40, பேர்ஸ்டோவ் 39.
பந்துவீச்சு:
ரஸ்ஸல்: 2-32, சாவ்லா 1-23.
கொல்கத்தா:
19.4 ஓவர்களில் 4 விக்கெட்இழப்புக்கு 183,
நிதிஷ் ராணா 68, ரஸ்ஸல் 49, உத்தப்பா 39.
பந்துவீச்சு:
ரஷித் கான் 1-26, கெளல் 1-35.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com