சென்னைக்கு 2-ஆவது வெற்றி

தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி.
சென்னைக்கு 2-ஆவது வெற்றி


தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி.
முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்து வென்றது.
ஐபிஎல் 2019-இன் 5ஆவது ஆட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிலையில் டாஸ் வென்ற தில்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரித்வி ஷா-தவன் தொடக்க வரிசை வீரர்களாக களமிறங்கினர்.
இளம் வீரரான பிரித்வி ஷா அதிரடியாக ஆடியதில் 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 24 ரன்களை குவித்து, சஹார் பந்தில் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து ஆட வந்த கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 18 ரன்களுடன், இம்ரான் தாஹிர் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.
விக்கெட்டுகள் சரிவு: அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் களமிறங்கியதும் ஆட்டம் சூடு பிடித்தது. எனினும் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 25 ரன்களை பந்த் எடுத்திருந்தபோது, பிரவோ பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது தில்லி.
அவருக்கு பின் வந்த காலின் இங்கிராம் 2 ரன்களோடு பிரவோ பந்துவீச்சில் அவுட்டானார். மூத்த வீரர் ஷிகர் தவன் 7 பவுண்டரியுடன் 51 ரன்களை எடுத்த நிலையில் பிரவோ பந்தில் வெளியேறினார். கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் டக் அவுட்டானார்.
தில்லி திணறல்: அப்போது 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது தில்லி.
அக்ஸர் பட்டேல் 9, ராகுல் டிவாட்டியா 11 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே தில்லியால் எடுக்க முடிந்தது. 
சென்னை வெற்றி: 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நடப்பு சாம்பியன் சென்னை தரப்பில் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் ராயுடு, இஷாந்த் பந்துவீச்சில் அவுட்டானார். 
அதிரடியாக ஆடிய வாட்சன் 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 44 ரன்களை எடுத்தபோது, மிஸ்ரா பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிஸ்ரா பந்துவீச்சில் வெளியேறினார்.
தொடர்ந்து தோனி, கேதார் ஜாதப் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.  27 ரன்கள் எடுத்த ஜாதவ், கீமா போல் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 32 ரன்களுடன் தோனியும், 4 ரன்களுடன் பிரவோவும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர். தோனி வழக்கம் போல் இறுதியில் ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர் ஒன்றை அடித்தார். பிரவோ அடித்த பவுண்டரி வெற்றிக்கு வித்திட்டது. 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்து வென்றது சென்னை.
தில்லி தரப்பில் அமித் மிஸ்ரா 2-35, இஷாந்த், ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

பிரவோ அபாரம்

சென்னை தரப்பில் பிரவோ அற்புதமாக பந்துவீசி 3-33 விக்கெட்டுகளை சாய்த்தார்.  மேலும் சஹார், ஜடேஜா, தாஹிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

சுருக்கமான ஸ்கோர்
தில்லி கேபிடல்ஸ்
20 ஓவர்களில் 147/6
தவன் 51, ரிஷப் பந்த் 25, 
பந்து வீச்சு:
டிவைன் பிரவோ 3-33.
சென்னை
20 ஓவர்களில் 150/4
வாட்சன் 44, ரெய்னா 30, தோனி 32,
பந்துவீச்சு:
அமித் மிஸ்ரா 2-35.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com