Enable Javscript for better performance
மியாமி ஓபன் டென்னிஸ்: வெளியேறினார் ஜோகோவிச்- Dinamani

சுடச்சுட

    
    atp-tennis


    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    இவரை ஸ்பெயின் வீரரும், போட்டித் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ளவருமான ஆர்.பௌடிஸ்டா அகட் 1-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்தார்.
    15 முறை கிராண்ட்ஸ்லாம் வென்று டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக வலம் வரும் ஜோகோவிச்சை வீழ்த்தி இருப்பதன் மூலம் சர்வதேச அளவில் டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை பௌடிஸ்டா ஈர்த்துள்ளார். முதலாவது செட் ஆட்டத்தை எளிதாக கைப்பற்றிய ஜோகோவிச், 2ஆவது சுற்றிலும் சிறப்பாக விளையாடினார்.
    அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை ஓய்ந்த பிறகு மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் பௌடிஸ்டா புத்துணர்ச்சியுடன் களம் கண்டார். இரண்டாவது செட்டை 7-5 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார். 3ஆவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வசப்படுத்தினார் பௌடிஸ்டா. 2 மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் வெற்றி வாகை சூடினார். காலிறுதியில் நடப்பு சாம்பியனும், அமெரிக்க வீரருமான ஜான் இஸ்னரை எதிர்கொள்கிறார் பௌடிஸ்டா. தோல்விக்கு பிறகு ஜோகோவிச் கூறுகையில், திறமையான வீரர் பௌடிஸ்டா. இந்த ஆட்டத்தில் நான் தோல்வி அடைந்திருக்கக் கூடாது. அருமையான சில வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டேன் என்றார்.
    இதனிடையே, மியாமி ஓபன் டென்னிஸில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் போட்டித் தரவரிசையில் 3ஆவது இடம் வகிக்கும் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவாவை 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லிக் பர்ட்டி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai