Enable Javscript for better performance
2019 உலகக் கோப்பையில் முதன்முறையாக களமிறங்கவுள்ள 5 இளம் நட்சத்திர வீரர்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    2019 உலகக் கோப்பையில் முதன்முறையாக களமிறங்கவுள்ள 5 இளம் நட்சத்திர வீரர்கள்

    By பா.சுஜித்குமார்  |   Published On : 02nd May 2019 12:56 AM  |   Last Updated : 02nd May 2019 12:56 AM  |  அ+அ அ-  |  

    player


    இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக 5 இளம் நட்சத்திர வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
    கிரிக்கெட் வீரர்களின் பெரிய கனவு, நோக்கம் என்பது தங்கள் நாட்டு தேசிய அணியில் இடம் பெற்று, உலகக் கோப்பை போட்டியில் ஆடுவதாகும். இதற்கிடையே மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து,தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அனைத்து நாடுகளும் 15 வீரர்கள் கொண்ட பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளன.
    இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக பங்கேற்கின்றனர் 5 இளம் வீரர்கள்:
    1. ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா):
    கடந்த 2016இல் அறிமுகமான பும்ராவின் வளர்ச்சி சீராக இருந்தது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான ஆட்டங்களிலும் பும்ரா தனது பந்துவீசும் திறமையை நிரூபித்துள்ளார்.  ஐசிசி ஒருநாள் பவுலிங் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழும் அவர், கடந்த 2018இல் 13 ஒருநாள் ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 100 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை பெற 15 விக்கெட்டுகளே அவருக்கு தேவைப்படுகிறது. 25 வயதான பும்ரா, கடைசி ஓவர்களின்போது வீசும் யாக்கர்கள் எதிராளிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
    2. ஷிம்ரன் ஹெட்மயர் (மே.இ.தீவுகள்):
    இளம் வீரரான ஷிம்ரன் ஹெட்மயர், மே.இ.தீவுகளின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றுள்ளார். 25 ஒருநாள் ஆட்டங்களில் 4 சதங்களுடன் 900 ரன்களை சேர்த்துள்ளார் அவர். கடந்த பிப்ரவரி மாதம் பார்படாஸில் நடைபெற்ற பலமான இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 104 ரன்கள் விளாசியதும் அடங்கும். கடந்த 201516இல் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை மே.இ.தீவுகளுக்கு பெற்றுத் தந்தார். இடதுகை அதிரடி வீரரான ஷிம்ரன் கடந்த 2018இல் 18 ஒருநாள் ஆட்டங்களில் 727 ரன்களை விளாசினார்.
    3. ஹை ரிச்சர்ட்ஸன் (ஆஸ்திரேலியா):
    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹை ரிச்சர்ட்ஸன் 140 கி.மீ வேகத்தில் இரு வகையிலும் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். உலகின் ஒருநாள் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான விராட் கோலியை 4 முறை அவுட்டாக்கியவர். இவை கடந்த ஜனவரி மாதம் ஆஸி. தொடரின்போது நிகழ்ந்தவை. 
    24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹை ரிச்சர்ட்ஸன், அந்த அணியின் மிச்செல் ஸ்டார்க்குடன் இணைந்து புதிய பந்தை வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக ஆஸி. உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.
    4. பாபர் ஆஸம் (பாகிஸ்தான்):
    வழக்கமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெயர் பெற்ற பாகிஸ்தானில் கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார் பாபர் ஆஸம். 
    வலது கை பேட்ஸ்மேனான பாபர் கடந்த 2015இல் அறிமுகமாகி, 59 ஆட்டங்களில் 2500 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து 3 ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய சாதனைக்கு சொந்தக்காரர். 21 இன்னிங்ஸ்களில் விரைவாக 1000 ரன்களை எட்டியவர் என்ற பெருமையும் பாபருக்கு உண்டு.
    5. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்):
    20 வயதே ஆன இளம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானின் வளர்ச்சி அபாரமானது. உள்நாட்டு போர், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனைச் சேர்ந்த ரஷித் கான், பாகிஸ்தான் அகதிகள் முகாமில் சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சி பெற்று இந்த நிலைக்கு வந்துள்ளார். கடந்த 2015இல் அறிமுகமான அவர், உலகளவில் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக உருவாகிவுள்ளார். 57 ஒருநாள் ஆட்டங்களில் 123 விக்கெட்டுகளை சாய்த்த ரஷித், பல்வேறு வகைகளில் பந்துவீசுவதில் வல்லவர். சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழும் அவர், ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp