தில்லியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது சிஎஸ்கே

தில்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே).
தில்லியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது சிஎஸ்கே


தில்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே).
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி கேபிட்டல் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் திணறிய தில்லி அணி, 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 99 ரன்களில் சுருண்டது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டூ பிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
ரன் குவிப்பில் ஈடுபடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த ஷேன் வாட்சன் "டக்' அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிளெஸ்ஸிஸýம், ரெய்னாவும் தில்லி அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். 
இந்த இணையை தில்லி பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் பிரிந்தார். 13.3ஆவது ஓவரில் அக்ஸர் வீசிய பந்தில் தவனிடம் கேட்ச் ஆகி 39 ரன்களில் நடையைக் கட்டினார் டூ பிளெஸ்ஸிஸ்.
இதையடுத்து கேப்டன் தோனி ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். 14.2ஆவது ஓவரில் அரை சதம் பதிவு செய்தார் ரெய்னா. இது டி20 கிரிக்கெட்டில் அவருக்கு 50ஆவது அரை சதம் ஆகும்.
எனினும், அதே ஓவரில் தவனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரெய்னா (37 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்ஸர், 59 ரன்). ஜடேஜாவுடன் தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18.3ஆவது ஓவரில் கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அப்போது அவர் 25 ரன்கள் எடுத்திருந்தார்.
தோனி 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ராயுடு 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். இவ்வாறாக 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே. தில்லி அணியின் சுசித் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தாஹிர் அபாரம்: இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய தில்லி அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் நிதானம் காட்டினார். அவரும் 44 ரன்களில் ஆட்டமிழக்க அதற்கு பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே சார்பில் அதிகபட்சமாக 3.2 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார் இம்ரான் தாஹிர். அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்கள் வீசி 9 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஹர்பஜன் சிங், தீபக் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்தது சிஎஸ்கே. தில்லி 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com