ஐபிஎல் 2019 : இறுதிச் சுற்றில் மும்பை

சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் 2019 சீசன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது மும்பை.
ஐபிஎல் 2019 : இறுதிச் சுற்றில் மும்பை


சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் 2019 சீசன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது மும்பை.
அதன் வீரர் சூரியகுமார் யாதவ் அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டமான குவாலிபையர்-1 சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெற்றது. 
இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும். டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை தரப்பில் டூ பிளெஸ்ஸிஸ்-வாட்ஸன் களமிறங்கினர். 
ஆரம்பமே அதிர்ச்சி: டூபிளெஸ்ஸிஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் சஹார் பந்துவீச்சில் வெளியேறினார். வாட்ஸனை 10 ரன்களோடு அவுட்டாக்கினார் க்ருணால் பாண்டி. நிலைத்து ஆடி ரன்களை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 5 ரன்களுக்கு ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது சென்னை.
அதன் பின் முரளி விஜய்-அம்பதி ராயுடு இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 10-ஆவது ஓவர் நிறைவில் தான் ஸ்கோர் 50-ஐ கடந்தது. 3 பவுண்டரியுடன் 26 ரன்களை எடுத்த முரளிவிஜய், ராகுல் சஹார் பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 
தோனி-ராயுடு ரன் குவிப்பு: அதன் பின் கேப்டன் தோனி-ராயுடு இணை ரன்களை சேர்த்தது. 
தப்பிய தோனி: லசித் மலிங்காவின் ஓவரில் அடுத்தடுத்து 2 பிரம்மாண்டமான சிக்ஸர்களை விளாசினார் தோனி. 
ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் இஷான்கிஷானிடம் கேட்ச் கொடுத்தார் தோனி. அது அவுட் என கருதப்பட்ட நிலையில்,  பும்ரா வீசியது நோபால் என நடுவர் அறிவித்ததால் தப்பினார் தோனி.
20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை சேர்த்தது சென்னை. 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடன் தோனியும், 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களுடன் ராயுடுவும் களத்தில் இருந்தனர்.
மும்பை தரப்பில் ராகுல் சஹார் 2-14, ஜெயந்த் யாதவ் 1-25, க்ருணால் பாண்டியா 1-21 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மும்பை வெற்றி: 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை தரப்பில் டி காக்-ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆனால் ரோஹித் 4, டி காக் 8 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். அதன் பின் சூரியகுமார் யாதவ்-இஷான் கிஷன் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.
சூரியகுமார் யாதவ் 7-ஆவது அரைசதம்: இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கொண்ட சென்னையின் பலமான சுழற்பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடிய சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் தனது 7-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 
தொடர் விக்கெட் சரிவு: மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த இஷான் கிஷானை 28 ரன்களுக்கு போல்டாக்கினார் தாஹிர். அவரைத் தொடர்ந்து க்ருணால் பாண்டியாவும் தாஹிர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டானார். 
கேட்சை தவற விட்ட வாட்ஸன்: ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் சூரியகுமார் யாதவ் ஸ்லிப்பில் அடித்த கேட்சை தவறவிட்டார் வாட்ஸன்.
10 பவுண்டரியுடன், 54 பந்துகளில் 71 ரன்களுடன் சூரியகுமார் யாதவும், 13 ரன்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர்.
18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை.
சென்னை தரப்பில் தாஹிர் 2-33, தீபக் சஹார் 1-30, ஹர்பஜன் சிங் 1-25 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர் 4-ஆவது வெற்றி: சென்னைக்கு எதிராக மும்பை அணி பெறும் தொடர் 4-ஆவது வெற்றி இதுவாகும். 
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாதில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை மும்பை பெற்றது.

இன்றைய ஆட்டம்
எலிமினேட்டர்: தில்லி-ஹைதராபாத்,
இடம்: விசாகப்பட்டினம்,
நேரம்: இரவு 7.30.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com