ஐபிஎல் 2019 சீசன்: மீண்டும் பார்முக்கு திரும்பிய ஸ்மித், வார்னர், ராகுல், பாண்டியா

நடப்பு ஐபிஎல் 2019 சீசன் போட்டியில் ஸ்மித், வார்னர், ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் எதிரணிகளுக்கு சவால் விடும் வகையில் மீண்டும் பார்முக்கு திரும்பியது பெரிய நிகழ்வாக உள்ளது.
ஐபிஎல் 2019 சீசன்: மீண்டும் பார்முக்கு திரும்பிய ஸ்மித், வார்னர், ராகுல், பாண்டியா


நடப்பு ஐபிஎல் 2019 சீசன் போட்டியில் ஸ்மித், வார்னர், ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் எதிரணிகளுக்கு சவால் விடும் வகையில் மீண்டும் பார்முக்கு திரும்பியது பெரிய நிகழ்வாக உள்ளது.
கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் உப்புகாகிதம் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் சீசனில் இருவரும் ஆட முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய வாரியம் டி20 ஆட்டங்களில் இருவரும் ஆட அனுமதி தந்தது. 
இதன் தொடர்ச்சியாக ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் ஆடினர். 
வார்னர் 692 ரன்கள்:
ஒட்டுமொத்த ஐபிஎல் சீசனில் 692 ரன்களை குவித்து சாதனை புரிந்த வார்னர் ஆரஞ்சு தொப்பியை வென்று ரூ.10 லட்சம் வெகுமதியையும் பெற்றார். மேலும் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்தும் சில ஆட்டங்களில் மீண்டும் அபாரமாக ஆடி பார்முக்கு திரும்பினார். வரும் உலகக் கோப்பை போட்டியில் எதிரணிகளுக்கு சவால் விடும் வகையில் இருவரும் ஐபிஎல் மூலம் தயாராகி உள்ளனர். ஏனைய ஆஸி வீரர்களான மேக்ஸ்வெல், ஆரோன் பின்ச் ஆகியோர் தங்கள் பங்கை திறம்பட செய்தனர்.
ஹார்திக்-ராகுல்:
மேலும் தனியார் டிவி நிகழ்ச்சியில் பெண்களை தரக்குறைவாக பேசியதாக எழுந்த புகாரை அடுத்து ஹார்திக்-லோகேஷ் ராகுல் இருவருக்கும் சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ உத்தரவிட்டது. இதனால் அவர்கள் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை இருந்தது. பஞ்சாப் அணியில் இடம் பெற்ற ராகுல் தனது அபார ஆட்டத்தால் வார்னருக்கு அடுத்து 593 ரன்களை குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மும்பை அணியில் இடம் பெற்ற ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, தனது திறமையான செயல்பாட்டால் ஆட்டத்தின் போக்கையை மாற்றி விட்டார்.
29 சிக்ஸர்கள், 14 விக்கெட், 11 கேட்ச்கள், 402 ரன்கள் என தனது இருப்பை வெளிப்படுத்தினார் பாண்டியா. ஐபிஎல் போட்டிக்கு தொடங்கு முன்பு பாண்டியா தயாராக போதிய காலம் இல்லாத நிலை இருந்தது. இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்ப்ரீத் பும்ரா-முகமது ஷமி:
அதே நேரத்தில் மும்பை அணியின் பும்ரா, பஞ்சாப் அணியின் ஷமி உள்ளிட்ட இருவரும் அபாரமாக பந்துவீசி தலா 19 விக்கெட்டுகளை மொத்தமாக சாய்த்தனர்.  எனினும் ஐபிஎல் ஆட்டங்களால் இருவரின் பணிச் சுமை கூடுதலாகி விட்டது இந்திய அணி நிர்வாகத்துக்கு கவலையை ஏற்படுத்தியது. 
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ககிஸா ரபாடா, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். ரபாடா மொத்தமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
சோபிக்காத சஹல்-குல்தீப் யாதவ்:
ஐபிஎல் தொடங்கும் முன்பு இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ்-யுஜவேந்திர சஹல் ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. 
ஆனால் சென்னை அணியின் 40 வயது இம்ரான் தாஹிர் கூக்லி, லெக் பிரேக் மூலம் சிறப்பாக பந்துவீசி 26 விக்கெட்டுகளை சாய்த்து பர்ப்பிள் தொப்பியையும் வென்றார்.
அதே நேரத்தில் ஆன்ட்ரெ ரஸ்ஸலின் அபார ஆட்டம், மே.இ.தீவுகள் அணிக்கு மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. அவர் தனியாகவே 510 ரன்கள், 52 சிக்ஸர்கள், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மிகவும் சிக்கலான நிலையில் உள்ள இலங்கை அணிக்கு மலிங்காவின் அபார பந்துவீச்சு,உலகக் கோப்பையில் ஆடுவதற்கான ஊக்கத்தை தரும்.
மேலும் சென்னை, ஹைதரபாத் பிட்ச்களின் செயல்பாடு, நடுவர்களின் கவனக்குறைவான முடிவுகள் இந்த ஐபிஎல் சீசனில் கறைகளாகி விட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com