முகப்பு விளையாட்டு செய்திகள்
உலகக் கோப்பையில் ஆடுவதற்கான பலம் இந்தியாவிடம் உள்ளது: ரவி சாஸ்திரி
By DIN | Published On : 15th May 2019 01:01 AM | Last Updated : 15th May 2019 01:01 AM | அ+அ அ- |

உலகக் கோப்பை போட்டியை எதிர்கொள்வதற்கான பலம் இந்தியாவிடம் உள்ளது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அணி எந்த சூழலிலும் ஆடும் நெகிழும் தன்மை கொண்டதாகும். இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த வீரர்கள் இணைந்து ஆடுவது என முடிவு செய்யப்படும்.
விஜய் சங்கரை தேர்வு செய்த போது, அவர் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கப்படலாம் எனக் கருதப்பட்டது. எனினும் அனைத்து வீரர்களும் எந்த நிலையிலும் ஆடும் திறன் பெற்றவர்கள். நம்மிடம் உள்ள 15 வீரர்களும், எந்த நேரத்திலும் அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்வார்கள்.
எந்த வேகப்பந்து வீச்சாளருக்கு பெரியளவில் காயம் ஏற்பட்டால், உடனே நேரடியாக மாற்று வீரர் களமிறக்கப்படுவார்.
கேதார் ஜாதவ் காயம், குல்தீப் யாதவ் பார்மில் இல்லாதது குறித்து பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. வரும் 22-ஆம் தேதி லண்டன் பயணிக்கும் போது, இடம் பெறும் 15 வீரர்கள் குறித்து அறியலாம்.
கேதார் ஜாதவ் காயத்தில் எலும்பு முறிவு இல்லை என்பது ஆறுதலை தருகிறது. அவர் குணமடைந்து வர அவகாசம் உள்ளது.
உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளுக்கு முன்கூட்டியே திட்டமிட முடியாது. போட்டி நடைபெறும் நேரத்தில் உள்ள தன்மைக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் அணிகள் இந்த போட்டியில் சிறப்பாக ஆடக்கூடும். மே.இ.தீவுகள் தற்போது மீண்டும் பழைய ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. அதிரடி பேட்டிங்குக்கு அந்த அணியை மிஞ்ச எவரும் இல்லை. ஆஸி. அணியில் அனைத்து வீரர்களும் இடம் பெற்றுள்ளதால், மற்ற அணிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவர் என்றார்.