முதன்முறையாக சாம்பியன் பட்டம் கைகூடுமா? இங்கிலாந்து அணி பலத்த எதிர்பார்ப்பு

கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த நாடு என்ற பழம்பெருமை மிகுந்தது இங்கிலாந்து.
முதன்முறையாக சாம்பியன் பட்டம் கைகூடுமா? இங்கிலாந்து அணி பலத்த எதிர்பார்ப்பு


கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த நாடு என்ற பழம்பெருமை மிகுந்தது இங்கிலாந்து. கடந்த 1800-ஆம் ஆண்டுகளிலேயே லண்டனில் லார்ட்ஸ், தி ஓவல் உள்பட பல்வேறு மைதானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அக்காலத்திலேயே இங்கிலாந்து-ஆஸி. அணிகள் இடையே முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது.
ஒருநாள் ஆட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின் முதல் மூன்று உலகக்கோப்பை போட்டிகள் (1975, 1979. 1983-புருடென்ஷியல் கோப்பை) இங்கிலாந்தில் தான் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. அதன் பின்னரே 1987-இல் முதன்முறையாக இந்தியா-பாகிஸ்தானில் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன. 
1975 உலகக் கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறிய இங்கிலாந்து, 1979 போட்டி இறுதிச் சுற்றில் மே.இ.தீவுகளிடம் தோல்வியுற்றது. மீண்டும் 1983-இல் அரையிறுதியில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக 1987, 1992 போட்டிகளில் இறுதிச் சுற்றில் நுழைந்து இரண்டாம் இடம் பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் 1996-இல் மட்டுமே காலிறுதி வரை முன்னேறியது இங்கிலாந்து. இப்போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக இங்கிலாந்தும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் மே 30 ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.
அணி விவரம்
இயான் மொர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்). டாம் கரன், ஜோ டென்லி, லியாம் பிளங்கட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட். (அலெக்ஸ் ஹேல்ஸ் திரும்பப் பெறப்பட்டார்)

கேப்டன் இயான் மொர்கன்

32 வயதான மொர்கன், மிடில் ஆர்டர் இடது கை பேட்ஸ்மேனாவார். 220 ஒரு நாள் ஆட்டங்களில் மொத்தம் 6884 ரன்களை குவித்துள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 124 ஆகும். மேலும் 12 சதங்கள், 44 அரைசதங்கள் இவரது கணக்கில் அடங்கும். 
கடந்த 2006-இல் அறிமுகமான மொர்கன், தடுமாற்றத்தில் இருந்த இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். தன்னம்பிக்கை, தைரியத்துடன் ஆடுபவர்.

மொயின் அலி 
31 வயதான மொயின் அலி, சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார். 93 ஆட்டங்களில் 1645 ரன்களை சேர்த்துள்ள மொயின் அதிகபட்ச ஸ்கோர் 128 ஆகும். 3 சதம்,  5 அரைசதங்கள் இவரது கணக்கில் அடங்கும். பந்துவீச்சில் 79 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.     சிறந்த பந்துவீச்சு 4/46. சிறந்த பேட்ஸ்மேனாகவும் உள்ள நிலையில், இவரது சுழற்பந்து வீச்சே மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பெற காரணமாகும்.

பென் ஸ்டோக்ஸ்
ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் (27) கடந்த 2011-இல் ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமானார். 81 ஆட்டங்களில் 2088 ரன்களை குவித்த, அவரது அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும். 3 சதம், 14 அரைசதங்களை அடித்துள்ளார். மொத்தம் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவரது சிறந்த பந்துவீச்சு 5/61 ஆகும். தன்னுடைய அபார பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர். இயான் போத்தமுடன் ஒப்பிடப்படுகிறார் ஸ்டோக்ஸ்.

ஜானி பேர்ஸ்டோ 
29 வயதான பேர்ஸ்டோ வலது கை பேட்ஸ்மேனாவார். 61 ஒருநாள் ஆட்டங்களில் 2169 ரன்களுடன்அதிகபட்சமாக 141 விளாசினார். இவரது கணக்கில் 6 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். கடந்த 2011-இல் அறிமுகம் செய்யப்பட்டார்.அவ்வப்போது தேவைக்கு ஏற்ப விக்கெட் கீப்பிங்கும் செய்வார்.

ஜோஸ் பட்லர் 
28 வயதான ஜோஸ் பட்லர், சிறந்த அதிரடி விக்கெட் கீப்பிங் வீரரான பட்லர், 129 ஆட்டங்களில் 3497 ரன்களை குவித்தார். அதிகபட்ச ஸ்கோர் 150 ஆகும். இதில் 8 சதம், 18 அரைசதங்கள் விளாசியுள்ளார். டி20 ஆட்டங்களில் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். ஐபிஎல் ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணியில் அற்புதமாக ஆடினார்.

ஜோ ரூட் 
28 வயதான ஜோ ரூட் கடந்த 2013 அறிமுகமானார். 129 ஆட்டங்களில் மொத்தம் 5137 ரன்களை சேர்த்த அவரது அதிபட்ச ஸ்கோர் 133 ஆகும். 14 சதங்கள், 29 அரைசதங்கள் இவரது கணக்கில் அடங்கும். மைதானத்தில் களமிறங்கியதும் மிகுந்த பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்க்கும் தன்மை கொண்டவர்.

தங்கள் நாட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைபோட்டியில் 
முதல் முறையாக பட்டம் வெல்லும் தீவிரத்தில் உள்ளது இங்கிலாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com