6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா ஆஸ்திரேலியா?

உலகக் கோப்பை வரலாற்றிலேயே 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி 6-ஆவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா ஆஸ்திரேலியா?


உலகக் கோப்பை வரலாற்றிலேயே 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி 6-ஆவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
கடந்த 1975ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை போட்டிகளில் தவறாமல் பங்கேற்று வரும் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் மே.இ.தீவுகளிடம் இறுதிச்சுற்றில் தோல்வியுற்றது. அதன் பின்னர் 1987 மற்றும் 1999, 2003, 2007 என தொடர்ந்து மூன்று முறையும், 2015-இல் 5-ஆவது முறையாகவும் பட்டத்தைக் கைப்பறறி சாதனை புரிந்தது. கடந்த 1996 போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
பந்தை சேதப்படுத்திய புகார் எதிரொலியாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டு ஸ்மித், வார்னர் ஆகியோர் இடம் பெறாத நிலையில் கடந்த ஓராண்டாக ஆஸி. அணி பலமிழந்து காணப்பட்டது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை  அந்த அணி கைப்பற்றியது. தற்போது ஸ்மித், வார்னர் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளதால், கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. ஜூன் 1-இல் பிரிஸ்டலில் ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் களம் காண்கிறது ஆஸி.

ஆரோன் பின்ச் (கேப்டன்) 
32 வயதான பின்ச், தொடக்கவரிசை வீரர்களில் ஒருவர். 109 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 4052 ரன்களை குவித்துள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 153 ஆகும். இதில் 13 சதம், 21 அரை சதங்கள் அடங்கும். கடந்த 2013-இல் அறிமுகமான பின்ச், ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாக உள்ளார். டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாக உள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் 
முன்னாள் கேப்டனான ஸ்மித் (29) தடைக்காலம் முடிந்து மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். 108 ஆட்டங்களில் 3431 ரன்களை சேர்த்துள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 164 ஆகும். 8 சதம், 19 அரைசதங்களை அடித்துள்ளார். 2010-இல் அறிமுகமாகி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்மித், பிராட்மேனுக்கு பின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். பந்தை சேதப்படுத்திய புகாரால் இவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

கிளென் மாக்ஸ்வெல்
30 வயதான மாக்ஸ்வெல், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கிலி ஏற்படுத்தும் அதிரடி பேட்ஸ்மேன். 100 ஆட்டங்களில் 2700 ரன்களை சேர்த்துள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும். 1 சதம், 19 அரை சதங்களை அடித்துள்ளார். பந்துவீச்சிலும் 50 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். சிறந்த பந்துவீச்சு 4/46 ஆகும். ரிவர்ஸ் ஸ்வீப் முறையில் ஆடுவதில் வல்லவரான மாக்ஸ்வெல்லுக்கு ஃபீல்டர்களை நிறுத்துவதில் எதிரணி கேப்டன்களுக்கு சிரமம் ஆகும். தனது அதிரடி ஆட்டத்தால் முடிவையே மாற்றும் திறன் கொண்டவர்.

டேவிட் வார்னர்
ஆஸி. அணியின் அதிரடி தொடக்க வீரரான வார்னர் (32), இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். 106 ஆட்டங்களில் 4343 ரன்களை குவித்துள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 179 ஆகும். 14 சதங்கள், 17 அரைசதங்கள் இதில் அடங்கும். கடந்த 2009-இல் ஒரு நாள் ஆட்டங்களில் அறிமுகமான வார்னர், டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். 
இவரும் பந்தை சேதப்படுத்திய புகாரால் தடை விதிக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

மிச்செல் ஸ்டார்க்
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் (29), மொத்தம் 75 ஆட்டங்களில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/28 ஆகும். கடந்த 2010-இல் அறிமுகமான ஸ்டார்க், கடந்த 10 ஆண்டுகளாக பிரதான பந்துவீச்சாளராக உள்ளார். எதிரணி பேட்ஸ்மேன்கள் அச்சப்படும் வகையில் பவுன்சர்களை வீசுவார். எதிராளிகளின் ஸ்டம்ப்புகளை இன்ஸ்விங்கர்கள் மூலம் பதம் பார்ப்பது இவரது சிறப்பாகும்.

பேட் கம்மின்ஸ் 
26 வயதான பேட் கம்மின்ஸ் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 48 ஆட்டங்களில் மொத்தம் 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவரது சிறந்த பந்துவீச்சு 5/70 ஆகும். கடந்த 2011-இல் அறிமுகமான கம்மின்ஸ், சீரான வேக அளவில் பந்துவீசுவதில் வல்லவர்.

அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கரே, 
பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஹை ரிச்சர்ட்ஸன், நாதன் கோல்டர் நைல், பெஹ்ரண்டர்ப், நாதன் லயன், ஆடம் ஸம்பா. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com