முகப்பு விளையாட்டு செய்திகள்
இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தமிழகத்தின் ஜெயப்பிரகாஷ் தேர்வு
By DIN | Published On : 18th May 2019 04:13 AM | Last Updated : 18th May 2019 04:13 AM | அ+அ அ- |

இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷுக்கு வாழ்த்து கூறும் நிர்வாகிகள்.
சென்னை: இந்திய நீச்சல் சம்மேளன வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயப்பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எப்.ஐ. எனப்படும் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்பு இவர் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
பொதுச் செயலாளராக க குஜராத்தைச் சேர்ந்த சோக்ஷி மோனலும், பொருளாளராக தெலங்கானாவைச் சேர்ந்த மேகலா ராமகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை தலைவர்களாக பால்ராஜ் சர்மா (பஞ்சாப்), ராஜிவ் சுகுமாறன் நாயர் (கேரளா), கமலேஷ் நானாவதி (குஜராத்), பியூஷ் சர்மா(ம.பி.), அணில் வியாஸ் (ராஜஸ்தான்), இணை செயலாளர்களாக ஆர்.பி.பாண்டே (பீகார்), ரவின்கபூர்(உ.பி.), மோகன் சதீஷ்குமார் (கர்நாடகா), அணில் காத்ரி (ஹரியாணா) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் 4 ஆண்டுகள் பதவி வகிப்பர்.
பின்னர் புதிய தலைவர் ஜெயப்பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சர்வதேச நீச்சல் போட்டிகளில் பி பிரிவு தகுதிப்போட்டிகளுக்கு தேர்வு பெறுவதற்கே இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கடினமாக இருந்தது. இப்போது சம்மேளனம் மேற்கொண்டுவரும் பல்வேறு பயிற்சி திட்டங்களால் பெரும்பாலோர் எளிதில் தகுதி பெற்று வருகின்றனர். இதே போல் ஏ பிரிவு தகுதி போட்டிகளுக்கும் தேர்வு பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தொழில்முறை வீரர், வீராங்கனைகளில் கிரிக்கெட்டை தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளையும் சேர்த்து மொத்தமே 5,000 பேர் மட்டுமே உள்ளனர். இது மிகவும் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம்.
எனவே, தொழில்முறை விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். பள்ளியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் விளையாட்டு ஒதுக்கீட்டில் தொழில்கல்வியில் சேர்ந்ததும், விளையாட்டை விட்டுவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவதால், அவர்களால் பெரிய அளவில் முன்னேற முடிவதில்லை. இத்தகைய நிலை மாறவேண்டும். அவர்கள் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை படைக்க வேண்டும்.
தமிழகத்தில் எஸ்.டி.ஏ.டி. சார்பில் மாவட்டம் தோறும் நீச்சல் குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு நல்ல கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தமிழகத்தில் இருப்பதைப்போல மற்ற மாநிலங்களிலும் நீச்சல் குளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புணே, பெங்களூரு போன்ற இடங்களில் நீச்சல் அகாதெமிகள் உருவாக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழகத்திலும் அகாதெமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவிலிருந்து 5 முதல் 10 பேர் வரை வரும் 2024 ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது இலக்காகும் என்றார்.
முன்னாள் தலைவர் திகம்பர் காமத், செயலாளர் வீரேந்திர நானாவதி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட செயலாளர் சோக்ஷி மோனால் ஆகியோர் உடனிருந்தனர்.