ட்விட்டரில் அன்பைப் பரிமாறிக்கொண்ட கெளதம் கம்பீர் - அதிஷி!

சில வாரங்களுக்கு முன்பு வரை கெளதம் கம்பீரும் அதிஷியும் இப்படித்தான் மோதிக்கொண்டார்கள். அந்த நிலைமை...
ட்விட்டரில் அன்பைப் பரிமாறிக்கொண்ட கெளதம் கம்பீர் - அதிஷி!

விவாதங்களில் நம்பிக்கை இல்லாத கெளதம் கம்பீர்,  அரசியலில் எதற்கு நுழைந்தார்? - அதிஷி

சில வாரங்களுக்கு முன்பு வரை கெளதம் கம்பீரும் அதிஷியும் இப்படித்தான் மோதிக்கொண்டார்கள். அந்த நிலைமை இன்று அடியோடு மாறிவிட்டது.

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் அதிஷியும் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரும் போட்டியிட்டார்கள். மிகவும் பரபரப்பான முறையில் இருவரும் பிரசாரம் மேற்கொண்டார்கள். துணைமுதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவருமான மணீஷ் சிசோடியா, அதிஷி ஆகியோர், "கிழக்கு தில்லியில் அதிஷியை மிக மோசமான வகையில் விமர்சிக்கும் துண்டுப் பிரசுரங்கள் பாஜகவால் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த துண்டுப் பிரசுரங்களை கௌதம் கம்பீரே விநியோகித்துள்ளார்' என்றனர். அப்போது அதிஷி கண்ணீர் விட்டு அழுதார். இந்நிலையில், இது தொடர்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில் "கௌதம் கம்பீர் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவார் என நினைக்கவில்லை. இப்படியான மனநிலை உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பெண்கள் அவர்களிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்?' என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது சுட்டுரையில் கௌதம் கம்பீர் தெரிவித்திருப்பதாவது: தேர்தல் வெற்றிக்காக சொந்தக் கட்சிப் பெண்ணின் கண்ணியத்தை சிதைக்கும் உங்களது நடவடிக்கையை வெறுக்கிறேன் கேஜரிவால். உங்களுடைய கட்சிச் சின்னமான துடைப்பத்தைக் கொண்டு உங்களது அழுக்கான மனதை யாராவது சுத்தம் செய்ய வேண்டும். நான்தான் இந்த துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தேன் என இவர்கள் நிரூபித்தால், நான் எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். நிரூபிக்காவிட்டால், கேஜரிவால் அரசியலில் இருந்து விலகுவாரா? கேஜரிவால் போன்ற ஒருவர் முதல்வராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டார். இதுபோன்ற சர்ச்சைகளால் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக தக்கவைத்தது. ஏழு தொகுதிகளிலும் மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று கம்பீர் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  

கிழக்கு தில்லியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், மொத்தம் பதிவான 12,56,314 வாக்குகளில், 6,96,156 வாக்குகள் (55.35 சதவீதம்) பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்த் சிங் லவ்லி 3,04,934 வாக்குகள் பெற்று (24.24 சதவீதம்) இரண்டாமிடமும், ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி 2,19,328 வாக்குகள் (17.44 சதவீதம்) பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். இத்தொகுதியில் கெளதம் கம்பீர் சுமார் 3.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் கெளதம் கம்பீரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

கெளதம் கம்பீருக்கு வாழ்த்துகள். கிழக்கு தில்லி மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். கிழக்கு தில்லியின் முன்னேற்றத்துக்கு என்னுடைய ஒத்துழைப்பை எப்போதும் அளிப்பேன். வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள கம்பீர் கூறியதாவது: வாழ்த்துகளுக்கு நன்றி. மதிப்புமிக்க எதிராளியை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆக்கபூர்வமான செயல்களை இணைந்து செய்ய நிச்சயம் உங்களை அழைப்பேன். உங்களுக்கும் என் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com