உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவாரா மலிங்கா?

1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றிய அணி இலங்கை. இந்திய எல்லையில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கை, ஒரு காலத்தில் வலுவான அணியாகத் திகழ்ந்தது.
உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவாரா மலிங்கா?

1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றிய அணி இலங்கை. இந்திய எல்லையில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கை, ஒரு காலத்தில் வலுவான அணியாகத் திகழ்ந்தது. தற்போது அனுபவம் இல்லாத வீரர்களைக் கொண்டு உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது.
திமுத் கருணாரத்னே தலைமையிலான அணியைத் தேர்வு செய்து இங்கிலாந்துக்கு அனுப்பியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
இலங்கை அணியில் அனுபவம் மிக்க வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் பந்து வீச்சுக்கு பெயர் போன வீரர் மலிங்கா. அவர் பந்து வீசும் முறை குறித்தும் ஒரு காலத்தில் சர்ச்சை எழுந்தது.
அண்மையில் நடந்துமுடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜொலித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் தனது சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணியை வெற்றி பெறச் செய்து, அந்த அணி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் மலிங்கா.  பந்துவீசும் திறமையும், சாதுரியமும் இன்னமும் தன்னிடம் உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார் மலிங்கா.
அவருக்கு எதிரான விமர்சனங்களை தவிடுபொடி ஆக்கியுள்ளார்.
இலங்கை டி20 அணியின் கேப்டனாக 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று தந்தவர்.
2 உலகக் கோப்பைப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரர். 
அதேபோல், ஒரு நாள் போட்டிகளில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளையும், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 பந்துகளில் வீக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளரும் மலிங்காதான்  (2007 உலகக்  கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்). 
218 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள மலிங்கா, 322 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடிக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை (97) வீழ்த்தியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மலிங்கா.
2007, 2011, 2015 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியவர். தற்போது 4 ஆவது முறையாக உலகக் கோப்பையில் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளார்.
இலங்கை ஒரு நாள் அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் முழுமையாக தோல்வி அடைந்ததை அடுத்து, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 
சக வீரர்களுடன் சகஜமாக இல்லை என்று கேப்டனாக இருந்தபோது மலிங்காவுக்கு எதிராக புகார்களும் எழுந்தன.
இருப்பினும், உலகக் கோப்பையில் இலங்கை அணியில் அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளது தேர்வுக் குழு. 35 வயதாகும் அனுபவமிக்க மூத்த வீரரான மலிங்கா வீசும் யார்க்கர் பந்துகளை எதிர்கொள்வதற்கு எந்த நாட்டைச் சேர்ந்த ஆட்டக்காரரும் திணருவர். உலகக் கோப்பையை மீண்டும் இலங்கை அணி வெல்ல வேண்டுமானால், முழு உடல் தகுதியுடன் மலிங்கா இருக்க வேண்டும். மலிங்காவுக்கு 2019 உலகக் கோப்பை கடைசி உலகக் கோப்பையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவரது பந்துவீச்சு ரசிகர்களின் அதிக கவனத்தை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com