இன்று வங்கதேசத்துடன் பயிற்சி ஆட்டம்:எழுச்சி பெறுமா இந்திய பேட்டிங் வரிசை ?

முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் தோல்வி ஏற்பட்ட நிலையில் வங்கதேச அணியுடன் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 2-ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் எழுச்சி பெறுமா
இன்று வங்கதேசத்துடன் பயிற்சி ஆட்டம்:எழுச்சி பெறுமா இந்திய பேட்டிங் வரிசை ?


முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் தோல்வி ஏற்பட்ட நிலையில் வங்கதேச அணியுடன் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 2-ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் எழுச்சி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 30-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வரும் ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகின்றன. இந்தியா சனிக்கிழமை நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வியுற்றது. இந்நிலையில் 2-ஆவது பயிற்சி ஆட்டம் வங்கதேசத்துடன் நடைபெறுகிறது.
நியூஸிலாந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் டிரென்ட் பெளல்ட் பந்துவீச்சில் நிலைகுலைந்தது இந்தியாவின் முதல் வரிசை. முதல் 3 முன்னணி வீரர்கள் சேர்ந்து 22 ரன்களையே சேர்த்தனர். இதனால் மிடில் ஆர்டர், பின்கள வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடாமல் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
8-ஆம் நிலையில் ஆடிய ரவீந்திர ஜடேஜா 54 ரன்களை குவித்து ஸ்கோரை உயர்த்தினார். நியூஸிலாந்தின் பெளல்ட் ஸ்விங் பந்துவீச்சை இந்திய வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. பதிலுக்கு இந்திய பந்துவீச்சு தனது முழு திறமையை  வெளிப்படுத்தவில்லை.
மழையால் வங்கதேசம் தவிப்பு
அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் முதல் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் மழையால் கைவிடப்பட்டது. இதனால் பயிற்சி பெறாமல் தவிப்புக்கு ஆளானது வங்கதேசம். அயர்லாந்துடன் முத்தரப்பு தொடரில் பட்டம் வென்ற வங்கதேசம், இரண்டாவது பயிற்சி ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளது.
ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார பந்து வீச்சை இந்தியா முழுமையாக நம்பி உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் வீசிய 4 ஓவர்கள் சிறப்பானவையாக அமைந்தன. 
கேதார் ஜாதவ்-விஜய்சங்கரால் கவலை
மேலும் காயத்தால் பாதிக்கப்பட்ட கேதார் ஜாதவ்-விஜய் சங்கர் ஆகியோருக்கு போதிய ஆட்டப் பயிற்சி கிடைக்காதது அணி நிர்வாகத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக சிறந்த ஸ்கோரை பெற வேண்டியது அவசியமாகும். இந்த பயிற்சி ஆட்டங்களில் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என கேப்டன் கோலி கருதியுள்ளார். ஆனால் கேதார், விஜய் சங்கர் இருவரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராகுலுக்கு வாய்ப்பு
அதே நேரத்தில் நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் தன்னை நிலைநிறுத்த லோகேஷ் ராகுலுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. மோர்டஸா, முஸ்தபிஸுர் ரஹ்மான், ரூபேல் ஹூசைன், ஷகிப் அல் ஹசன் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களை குவிப்பார் ராகுல் எனத் தெரிகிறது.
ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஹார்திக் பாண்டியாவை 5-ஆம் இடத்திலும், தோனியை 6-ஆம் இடத்திலும் களமிறக்கலாம் எனத் தெரிகிறது.
வங்கதேச அணியில் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பிரதான பந்துவீச்சாளராக மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்துகிறார். 
இந்த பயிற்சி ஆட்டத்திலும் முதலில் மழையால் பாதிக்கப்பட்டு தாமதமாக தொடங்கப்படும் நிலை உள்ளது. 


இன்றைய பயிற்சி ஆட்டம்

இந்தியா-வங்கதேசம்
இடம்:
சோபியா கார்டனஸ், கார்டிப்,
ஆட்ட நேரம்: மாலை 3.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com