ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரி: முஷ்பிகுர் அதிரடியில் வென்றது வங்கதேசம்!

இந்தியாவுடனான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி


இந்தியாவுடனான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.

149 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணியும் முதல் ஓவரிலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தது. தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் லிட்டன் தாஸ் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, முகமது நைமுடன், சோமியா சர்கார் இணைந்தார்.

இந்த இணை ஆடுகளத்துக்கேற்ப நிதானம் காட்டி விளையாடி வந்தது. இந்த நிலையில், சாஹலை அறிமுகப்படுத்தினார் ரோஹித் சர்மா. இதற்குப் பலனளிக்கும் வகையில் அவர் நைம் (26 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்பிறகு சர்காரும், முஷ்பிகுர் ரஹீமும் இணைந்து பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடாத போதிலும், ஓரளவுக்கு தேவையான வேகத்திலேயே ரன்களை எடுத்து வந்தது. இதனால், ஆட்டத்தின் முக்கியக் கட்டமான 7 முதல் 15 ஓவர்களில் இந்திய அணியால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அதேசமயம், இந்த பாட்னர்ஷிப் வங்கதேச அணியின் கடைசி கட்ட அதிரடிக்கு அடித்தளமும் அமைத்தது.

கடைசி 5 ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. இந்த இக்கட்டான நிலையில் 16-வது ஓவரை க்ருணால் பாண்டியா கச்சிதமாக வீசினார். அடுத்த ஓவரை கலீல் அகமது சிக்ஸருடன் தொடங்கினாலும், அதை விக்கெட்டுடன் நிறைவு செய்தார். 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து சர்கார் 17-வது ஓவரில் போல்டானார்.

இதையடுத்து, கடைசி 3 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின்  3-வது பந்தில் ரஹீம் கொடுத்த கேட்சை க்ருணால் பாண்டியா தவறவிட்டார். அதேசமயம், அது அந்த அணிக்கு இதன்மூலம் பவுண்டரியும் கிடைத்தது. இதன்பிறகு, கடைசி பந்தில் கேப்டன் மஹமதுல்லா மேற்கொண்டு ஒரு பவுண்டரி அடிக்க  வங்கதேச அணி நல்ல நிலையை எட்டியது.

கடைசி 2 ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. கலீல் அகமது வீசிய 19-வது ஓவரின் முதலிரண்டு பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. இதுவரை நன்றாக பந்துவீசி வந்த கலீல் அகமது சொதப்பலைத் தொடங்கினார். அந்த ஓவரில் அடுத்து வீசிய 4 பந்துகளையும் ரஹீம் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால், வங்கதேச அணிக்கு அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தது.

முஷ்பிகுர் ரஹீமும் தனது அரைசதத்தை எட்டினார்.

இதனால், கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு வெறும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. தீபக் சாஹருக்கு ஒரு ஓவர் மீதமிருந்த நிலையிலும் ரோஹித் சர்மா ஷிவம் டூபேவை முதன்முதலாக பந்துவீச அழைத்தார். இந்த ஓவரில் 2-வது பந்தில் 2 ரன்களும், 3-வது பந்து வைடாகவும் போக ஸ்கோர் சமமானது. இதன்பிறகு, அடுத்த பந்தை மஹமதுல்லா சிக்ஸருக்குப் பறக்கவிட்டு வெற்றி இலக்கை அடையச் செய்தார்.

19.3 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முஷ்பிகுர் ரஹீம் 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணி தற்போது 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த ஆட்டத்தில் சாஹல் வீசிய ஓவரில் ரஹீமுக்கு இரண்டு முறை எல்பிடபிள்யூ அப்பீல் கேட்காததும், அவருடைய கேட்சை க்ருணால் பாண்டியா தவறவிட்டதும் இந்திய அணிக்கு எதிராக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com