வர்ணனையாளராக களமிறங்குகிறாரா தோனி?

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியை சிறப்பு வர்ணனையாளராக களமிறக்க ஆட்டத்தை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வர்ணனையாளராக களமிறங்குகிறாரா தோனி?


இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியை சிறப்பு வர்ணனையாளராக களமிறக்க ஆட்டத்தை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பதால் இதைக் கோலாகலமாகக் கொண்டாட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தை ஒளிபரப்பவுள்ள ஸ்டார் நிறுவனமும் இந்த ஆட்டத்துக்காக வகுத்துள்ள பிரத்யேக திட்டத்தை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியிடம் பகிர்ந்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்த தகவலை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் சேகரித்துள்ளது.

அதன்படி, இந்த டெஸ்ட் ஆட்டத்தின் முதலிரண்டு நாட்களில் இந்திய அணியின் அனைத்து முன்னாள் கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. தங்கள் மனதுக்கு நெருக்கமான, பிடித்தமான தருணங்களைப் பகிருமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படவுள்ளார்கள். அதேசமயம், தேசிய கீதம் இசைக்கும்போது மைதானத்தில் விராட் கோலி மற்றும் இந்திய அணியுடன் அனைத்து முன்னாள் கேப்டன்களும் நிற்கவைக்கப்படவுள்ளார்கள்.

முன்னாள் கேப்டன்கள் சிறப்பு வர்ணனையாளர்களாக களமிறங்கி தங்களுக்குப் பிடித்தமான தருணங்களைப் பகிர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் கேப்டன் என்ற அடிப்படையில், தோனிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று தோனி வர்ணனையாளராகப் பங்கேற்றால் அது ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். அதேசமயம், தோனி வர்ணனையாளராக களமிறங்குவதும் இதுவே முதன்முறையாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: இத்தனை பிரபலங்களுக்கும் அழைப்பா.. வியக்க வைக்கும் பகலிரவு டெஸ்டுக்கான பலே திட்டம்!

இதில் 3-ஆம் நாள் ஆட்டத்தின்போது, 2001-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர ஆட்டத்திற்கு முந்தைய தினத்தன்று பிங்க் நிற பந்தில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதையும் ஒளிபரப்ப ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனென்றால், இந்திய கிரிக்கெட் அணி பிங்க் நிற பந்தில் விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.

இந்திய அணியின் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்கு பிசிசிஐ ஒருபக்கமும், ஆட்டத்தை ஒளிபரப்பவுள்ள ஸ்டார் நிறுவனம் ஒருபக்கமும் வகுத்துள்ள திட்டங்களைப் பார்க்கும்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com