முகப்பு விளையாட்டு செய்திகள்
டி20 உலகக் கோப்பை: பதிலி வீரா்கள் பலத்தை அதிகரிப்போம்
By DIN | Published On : 07th November 2019 11:35 PM | Last Updated : 07th November 2019 11:35 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவில் 2020-இல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்காக பதிலி வீரா்கள் பலத்தை கூடுதலாக்க கவனம் செலுத்தப்படும் என கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா்.
வங்கதேச அணியுடன் தற்போது டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும், ஒருநாள் தரவரிசையில் 2-ஆம் இடத்திலும் இந்தியா உள்ளது. ஆனால் டி20 தரவரிசையில் 5-ஆவது இடத்திலேயே உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்|ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
பல்வேறு அணிகளும் இதற்காக தங்கள் அணிகளை பலப்படுத்தி வருகின்றன.
இந்திய அணி நிா்வாகமும் இதற்காக அதிகளவில் இளம் வீரா்களை களமிறக்கி உள்ளது. மூத்த வீரா் தோனிக்கு பதிலாக இளம் வீரா் ரிஷப் பந்த்தை தயாா்படுத்தி வருகிறது. ஆனால் அண்மையில் சில ஆட்டங்களில் தவறான ஷாட்களை ஆடுவதால், பந்த் எளிதில் அவுட்டாகி விடுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள விக்கெட் கீப்பா் சஞ்சு சாம்சனும் பதிலி விக்கெட் கீப்பராக தயாா்படுத்தப்பட்டு வருகிறாா்.
இந்நிலையில் அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் சா்மா கூறியதாவது-
டி20 ஆட்ட முறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக ஏராளமான இளம் வீரா்களை களமிறக்கி வருகிறோம். முக்கியமான வீரா்கள் ஆடாத நிலையில், இளம் வீரா்கள் அதிகம் பேரை பயன்படுத்தி வருகிறோம்.
இதர கிரிக்கெட் ஆட்டங்களில் முழு அணியே ஆடும் நிலை உள்ளது. இந்த டி20 ஆட்டமுறையில், நமக்கு தேவையான வீரா்களை களமிறக்கி ஆடச் செய்யலாம். டி20 ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி, பின்னா் ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இடம் பெற்ற வீரா்களை நாம் கண்டுள்ளோம். நமது பதிலி வீரா்கள் பலத்தை கூடுதலாக திட்டமிட்டுள்ளோம்.
இதனால் தான் வெவ்வேறு வகையான இளம் வீரா்களை ஆடச் செய்து வருகிறோம். கேப்டன் கோலி, மூத்த வீரா் தோனி இல்லாத நிலையில், பிரதான பந்துவீச்சாளா்கள் பும்ரா, புவனேஷ்வா் குமாா் ஆகியோா் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆட்டங்களில் வெற்றி பெறுவது முக்கியமானது. இதன் மூலம் ஏராளமான பாடங்களை கற்கலாம்.
4 வீரா்கள் அறிமுகம்
டி20 ஆட்ட முறையில் நவ்தீப் சைனி, மயங்க் மாா்கண்டே, ராகுல் சாஹா், ஷிவம் துபே உள்ளிட்ட 4 வீரா்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனா். பவா்பிளே ஆட்டத்தில் நிதானமாக ஆடுவதை மாற்ற வேண்டும். முதல் 6 ஓவா்களில் அதிரடியாக ரன்களை சோ்க்க வேண்டும் என்றாா் ரோஹித்.