முகப்பு விளையாட்டு செய்திகள்
தொடரை சமன் செய்யுமா இந்தியா? வெற்றி இலக்கை நோக்கி ரோஹித் அண்ட் கோ!
By DIN | Published On : 07th November 2019 09:02 PM | Last Updated : 07th November 2019 09:02 PM | அ+அ அ- |

இந்தியாவுடனான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் முகமது நைம் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இதனால், அந்த அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க: அவசரப்படுகிறாரா ரிஷப் பந்த்: ஸ்டம்பிங் செய்தும் நாட் அவுட் கொடுத்த நடுவர்!
முதல் டி20 ஆட்டத்தில் தோல்வியடைந்த நெருக்கடி, இந்திய அணியின் பீல்டிங்கில் தெரிந்தது. ஸ்டம்பிங்கில் தவறு செய்வது, கேட்சை தவறவிடுவது, மோசமான த்ரோ என இந்திய அணி சொதப்பலை வெளிப்படுத்தியது. வங்கதேசத்தின் தொடக்கத்துக்கு இதுவும் வலு சேர்க்க, அந்த அணி 180 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டி20 கிரிக்கெட்டில் முக்கியக் கட்டமான 7 முதல் 15 ஓவர்களில் இந்திய அணி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. முதலில் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த தாஸை பந்த் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பிறகு முகமது நைமை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். இவர் 31 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அடுத்த களமிறங்கிய ரஹிமை சாஹல் தனது சுழலில் வீழ்த்தினார். அதே ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்த சர்காரையும் சாஹல் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்தடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி சற்று திணறியது. இதன்பிறகு, களமிறங்கிய பேட்ஸ்மேன்களிலும் கேப்டன் மஹமதுல்லாவைத் தவிர மற்றவர்கள் பெரிதளவு சோபிக்கவில்லை. மஹமதுல்லா மட்டும் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து தீபக் சாஹர் ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதனால், ஒரு கட்டத்தில் 180 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணித் தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.