முகப்பு விளையாட்டு செய்திகள்
முதல் ஆட்டத்தில் தோற்றாலும் அடுத்த இரு ஆட்டங்களிலும் வென்று ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி!
By எழில் | Published On : 07th November 2019 11:01 AM | Last Updated : 07th November 2019 11:01 AM | அ+அ அ- |

சபாஷ்!
முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோற்றாலும் அடுத்து நடைபெற்ற மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களிலும் வென்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி.
முதல் ஒருநாள் ஆட்டத்தை மே.இ. தீவுகள் அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஆட்டத்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சமன் செய்தது இந்திய மகளிர் அணி. மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நார்த் சவுண்டில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 50 ஓவர்களில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஸ்டாபானி டெய்லர் 79 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் அணித் தரப்பில் கோஸ்வாமியும் பூணம் யாதவும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்திய மகளிர் அணிக்கு அருமையான தொடக்க அமைந்தது. 26-வது ஓவரில் 141 ரன்கள் எடுத்த பிறகு முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி. ரோட்ரிகஸ் 69 ரன்களிலும் மந்தனா 74 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்கள். இந்திய மகளிர் அணி 42.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்றது.