வங்கதேசத்தை புரட்டிப்போட்ட ரோஹித்: தொடரை சமன் செய்தது இந்தியா!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ரோஹித் சர்மாவின் மிரட்டல் அதிரடியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்தை புரட்டிப்போட்ட ரோஹித்: தொடரை சமன் செய்தது இந்தியா!


வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ரோஹித் சர்மாவின் மிரட்டல் அதிரடியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே தவான் 2 பவுண்டரிகள் அடித்து அதிரடி தொடக்கம் தந்தார். ஆனால், அதன்பிறகு அதிரடிக்கான பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்றுக்கொண்டார். முஸ்தபிஸூர் ரஹ்மான் வீசிய 4-வது ஓவரில் முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய அவர் அதே ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து ருத்ரதாண்டவத்தைத் தொடங்கினார்.

5-வது 2 பவுண்டரி, 6-வது ஓவரில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என விளாச, பவர் பிளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 8-வது ஓவரின் முதல் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த ரோஹித், 23-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அதேசமயம், இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் ஓவருக்கு 6 ரன்களுக்கு குறைவாக சரிந்தது. 

வங்கதேச அணி இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்குள், மொசதெக் ஹோசைன் வீசிய 10-வது ஓவரின் முதல் 3 பந்துகளை ரோஹித் சர்மா சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு மேலும் மிரட்டினார். இதனால், வங்கதேச அணியின் தோல்வி இந்த ஓவரிலேயே ஏறத்தாழ உறுதியானது.

இந்நிலையில், அந்த அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அமினுல் இஸ்லாம் ஓவரில் ஷிகர் தவான் 31 ரன்களுக்குப் போல்டானார். இவருடைய அடுத்த ஓவரிலேயே ரோஹித் சர்மாவும் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 43 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 85 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, வெற்றிக்கு அருகே எட்டியதாலும் நெருக்கடி இல்லாத காரணத்தினாலும், ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினார். இதனால், 15.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களுடனும், கேஎல் ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நாக்பூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com