ரிஷப் பந்துக்கு இப்படி செய்வது நியாயமற்றது: கேப்டன் ரோஹித் கருத்து

ரிஷப் பந்தை, அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்துக்கு இப்படி செய்வது நியாயமற்றது: கேப்டன் ரோஹித் கருத்து

ரிஷப் பந்தை, அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இன்றும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரிஷப் பந்த்-க்கு ஆதரவான கருத்துகளை ரோஹித் சர்மா தெரிவித்தார்.

இதுகுறித்து ரோஹித் சர்மா பேசுகையில், 

"ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ரிஷப் பந்த் குறித்த பேச்சுகள் இருந்துகொண்டே இருக்கிறது. களத்தில் அவர் செய்ய நினைப்பதை செய்வதற்கு அவரை அனுமதிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. அதனால், அனைவரது பார்வையையும் அவரிடம் இருந்து சற்று திருப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவர் பயமில்லாத கிரிக்கெட் வீரர். அவருக்கு அந்த சுதந்திரத்தை நாங்கள் அளிக்க வேண்டும்.

நீங்கள் சிறிய காலத்துக்கு உங்களது பார்வையை அவரிடம் இருந்து திருப்பினால், அது அவர் சிறப்பாக செயல்பட உதவும். அவருக்கு 22 வயதே ஆகிறது. தற்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதிக்க அவர் முயற்சிக்கிறார். இந்த சூழலில் அவர் களத்தில் செய்யும் அனைத்தையும் குறித்து பேச்சுகள் எழுவது நியாயமற்றது.

அவர் நன்றாக செயல்படும்போதும், நிறைய கவனம் செலுத்துங்கள். தவறான விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம். அவர் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவர் நன்றாகவும் கீப்பிங் செய்துள்ளார். அணி நிர்வாகம் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்கிறதோ, அதைச் செய்யவே அவர் முயற்சிக்கிறார். 

ரிஷப் பந்தும் சரி ஷ்ரேயாஸ் ஐயரும் சரி இருவருமே திறமையானவர்கள். நிச்சயம் அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம். அனைத்து மட்டத்திலும் அவர்கள் தங்களை நிரூபித்துள்ளார்கள். ரிஷப் ஓரிரு வருடங்களாக அணியில் இருக்கிறார். ஷ்ரேயாஸ் அவ்வப்போது வந்துபோகிறார். அவரும் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் நிலையாக இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் கால் பதிக்கவுள்ளார்.

எந்த ரக கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, உங்களுடைய ஆட்டத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நான் அவர்களுக்கு தெரிவிக்கும் கருத்து. உங்களுடைய ஆட்டம் குறித்து நீங்கள் மிகுந்த உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு அதற்கான முடிவுகள் கிடைக்காமல் போவதற்கான காரணம் ஏதும் எனக்குத் தெரியவில்லை.

சர்வதேச அளவில் வெற்றிகரமாக வலம் வர அவர்களிடம் எல்லாமே இருக்கிறது. இன்னும் ஒரிரு ஆண்டுகளில் அவர்கள் வேறுவிதமாக பேட்டிங் செய்வதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com