இரண்டே நாளில் 2-வது ஹாட்ரிக்: பந்துவீச்சில் அசத்தும் தீபக் சாஹர்!

வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்து 2 முழு நாட்கள் ஆகாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஹாட்ரிக் சாதனையை புரிந்து தீபக் சாஹர் அசத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்து 2 முழு நாட்கள் ஆகாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஹாட்ரிக் சாதனையை புரிந்து தீபக் சாஹர் அசத்தியுள்ளார்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதேசமயம், இந்த ஆட்டத்தில் 3.2 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பந்துவீச்சு (7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள்) என்ற சாதனையையும் அவர் படைத்தார். 

இந்த சாதனையைப் புரிந்த இரண்டே நாளில் சையது முஷ்டாக் அலி தொடரில் தீபக் சாஹர் மீண்டும் ஒரு ஹாட்ரிக் சாதனையைப் படைத்துள்ளார்.

சையது முஷ்டாக் அலி தொடரின் 4-வது சுற்றில் ராஜஸ்தான் அணி இன்று (செவ்வாய்கிழமை) விதர்பாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த விதர்பா அணி 13 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதில், 13-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் அவர் ருஷப் ரத்தோடை ஆட்டமிழக்கச் செய்தார். 

இதையடுத்து, கடைசி 3 பந்துகளில் முறையே தர்ஷன் நால்கண்டே, ஸ்ரீகாந்த் வாக் மற்றும் அக்ஷய் வாத்கர் என அடுத்து ஆட்டமிழக்கச் செய்து மற்றொரு ஹாட்ரிக் சாதனையை புரிந்து அசத்தியுள்ளார். இதன்மூலம், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கான இருப்பிடத்தை அவர் உறுதி செய்து கொண்டே வருகிறார்.

இருந்தபோதிலும், இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை ராஜஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்காக மாற்றியமைக்கப்பட்டது. இதை நோக்கி களமிறங்கிய அந்த அணி 13 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com