கடகடவென விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேச அணி

இந்திய அணித் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளும் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.
கடகடவென விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேச அணி

இந்தூரில் முதல் நாளன்று வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும். நான் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்திருப்பேன் என கோலி சொன்னது போலவே முதல் நாள் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு உள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களை விடவும் வேகப்பந்துவீச்சாளர்களே அதிக ஓவர்களை வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

3 டி20 ஆட்டங்கள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. டி20 தொடரை ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா, வங்கதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற வங்கதேச அணியின் புதிய கேப்டன் மொமிநுல் ஹக் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் நதீமுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஆரம்பம் முதல் சிறப்பாகப் பந்துவீசியதால் ரன் எடுக்க வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர்கள் இம்ருல் கைஸும் இஸ்லாமும் தலா 6 ரன்கள் சேர்த்து முறையே உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தார்கள்.

கவனமாக 36 பந்துகள் வரை எதிர்கொண்டு 12 ரன்கள் எடுத்த முகமது மிதுன் 12 ரன்களில் ஷமி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 24-வது ஓவரில் முஷ்ஃபிகுர் ரஹிம் அளித்த கேட்சை நழுவவிட்டார் விராட் கோலி. முதல் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி, 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. ரஹிம் 14, ஹக் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு அஸ்வினும் முகமது ஷமியும் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள்.

28-வது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சில் முஷ்ஃபிகுர் அளித்த கேட்சைத் ஸ்லிப் பகுதியில் தவறவிட்டார் ரஹானே. இது முஷ்ஃபிகுருக்குக் கிடைத்த இரண்டாவது அதிர்ஷ்டம். நன்கு விளையாடி வந்த ஹக், 80 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். இது இந்தியாவில் அஸ்வின் எடுத்துள்ள 250-வது டெஸ்ட் விக்கெட்.

மஹ்முதுல்லா இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் திணறினார். அவர் அளித்த ஒரு கேட்சையும் தவறவிட்டார் ரஹானே, அதே அஸ்வின் பந்துவீச்சில். இன்று மட்டும் ஸ்லிப் பகுதியில் இந்திய அணியினர் நான்கு கேட்சுகளைத் தவறவிட்டார்கள். கேட்ச் பிடிக்காவிட்டால் என்ன, க்ளீன் போல்ட் செய்து எனக்கான விக்கெட்டை எடுத்துக்கொள்கிறேன் என்று 10 ரன்களில் மஹ்முதுல்லாவை போல்ட் செய்தார் அஸ்வின். 

140/5 என்று இருந்திருந்தால் வங்கதேச அணி ஓரளவு மகிழ்ச்சியடைந்திருக்கும். ஆனால், தேநீர் இடைவேளைக்கு முன்பு வீசப்பட்ட ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்தது. ஷமி வீசிய அந்த ஓவரில் கடைசி இரு பந்துகளில் முஷ்ஃபிகுரை 43 ரன்களிலும் ஹசன் மிர்ஸாவை ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேற்றினார் ஷமி.

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது வங்கதேச அணி, 54 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்திலேயே லிடன் தாஸ் கொடுத்த கேட்சைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டார் விராட் கோலி. லிடன் 21 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் ஹாட்ரிக் கனவுடன் பந்துவீசிய ஷமிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அடுத்ததாக, தைஜுல் இஸ்லாம் 1 ரன்னில் ஜடேஜாவால் ரன் அவுட் ஆனார். எபாதத் ஹுசைன் 2 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளும் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com