தவன், விஜய்க்கு இனி வாய்ப்பில்லை?: 3-வது சதத்தைப் பதிவு செய்த மயங்க் அகர்வால்!

இந்தூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 183 பந்துகளில் சதமடித்துள்ளார் மயங்க் அகர்வால். இது அவருடைய 3-வது சதம்.
தவன், விஜய்க்கு இனி வாய்ப்பில்லை?: 3-வது சதத்தைப் பதிவு செய்த மயங்க் அகர்வால்!

ஷிகர் தவன், முரளி விஜய் ஆகிய இருவரும் பல வருடங்களாக இந்திய அணியில் தொடக்க வீரர்களாக விளையாடியவர்கள். ஷிகர் தவன் 34 டெஸ்டுகள் விளையாடி 2315 ரன்களும் 7 சதங்களும் அடித்துள்ளார். முரளி விஜய் 61 டெஸ்டுகள் விளையாடி 3982 ரன்களும் 12 சதங்களும் அடித்துள்ளார். ஆனால் இருவரும் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. முரளி விஜய் கடந்த வருட டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடைசியாக விளையாடினார். தவன், கடந்த வருட செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராகக் கடைசியாக விளையாடினார். 

இனி அவ்விருவரும் இந்திய அணிக்குத் தேவையில்லை என்கிற முடிவுக்கு அணி நிர்வாகம் வருவதற்கு முக்கியக் காரணம் - மயங்க் அகர்வால்.

ஷிகர் தவன், முரளி விஜய் ஆகிய இருவரும் மோசமாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பிடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார், 28 வயது மயங்க் அகர்வால். இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 3 சதங்கள், 3 அரை சதங்களை எடுத்துள்ளார். 12 இன்னிங்ஸ்களில் ஆறு முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். 

இந்தூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 183 பந்துகளில் சதமடித்துள்ளார் மயங்க் அகர்வால். இது அவருடைய 3-வது சதம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாக இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக இருந்தவர்கள், தொடக்க வீரர்கள். ஷிகர் தவன், முரளி விஜய் ஆகியோரின் தோல்விகளுக்குப் பிறகு கே.எல். ராகுலும் இந்திய அணி நிர்வாகத்தை மிகவும் சோதித்தார். இந்தக் காலக்கட்டத்தில் இந்திய அணிக்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறார் மயங்க் அகர்வால். உள்ளூர் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ரன்கள் அடித்து தன்னை நிரூபித்த பிறகே இந்திய அணிக்குத் தேர்வானார். தனது ஃபார்மை சர்வதேச கிரிக்கெட்டிலும் நிரூபித்து இந்திய அணியின் பெரிய சிக்கலைப் போக்கியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 டெஸ்டுகளிலும் 76, 42, 77 என அதிக ரன்கள் குவித்து ஆச்சர்யப்படுத்தினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்டுகளில் ஒரு அரை சதம் மட்டும் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்டுகளில் மீண்டும் ரன்கள் குவிக்க ஆரம்பித்தார். முதல் டெஸ்டில் இரட்டைச் சதமும் 2-வது டெஸ்டில் சதமும் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். இப்போது வங்கதேசத்துக்கு எதிராக மற்றுமொரு சதம் அடித்துள்ளார்.

மயங்க் அகர்வால்: டெஸ்ட்

முதல் டெஸ்ட்: அரை சதம்
2-வது டெஸ்ட்: அரை சதம்
3-வது டெஸ்ட்: தோல்வி
4-வது டெஸ்ட்: அரை சதம்
5-வது டெஸ்ட்: இரட்டைச் சதம்
6-வது டெஸ்ட்: சதம்
7-வது டெஸ்ட்: தோல்வி
8-வது டெஸ்ட்: சதம்

மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா என்கிற இந்தத் தொடக்கக் கூட்டணி இன்னும் பல டெஸ்டுகளில் விளையாடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மயங்க் அகர்வாலின் இந்த ரன் குவிப்புகள் ஷிகர் தவன், முரளி விஜய்க்கு மட்டுமல்ல, இந்திய அணியில் நுழைய வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ள இளம் தொடக்க வீரர்களுக்கும் தடையாக உள்ளன. இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் எந்தளவுக்கு பொறுப்புடன் விளையாட வேண்டும், எந்தளவுக்கு அணிக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் மயங்க் அகர்வால். தொடரட்டும் இவருடைய ரன் குவிப்புகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com