இந்த ஐந்து வீரர்களையும் ஐபிஎல் அணிகள் விடுவிக்காதது ஏன்?

அடுத்த வருடமாவது ஆர்சிபி அணிக்குப் பயனுள்ள வீரராக இருப்பாரா சிராஜ்...
இந்த ஐந்து வீரர்களையும் ஐபிஎல் அணிகள் விடுவிக்காதது ஏன்?

ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன. மேலும் அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியலையும் அணிகள் வெளியிட்டுள்ளன. ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷோனி, துருவ் ஷோரே, டேவிட் வில்லி, மோஹித் சர்மா ஆகிய ஐந்து வீரர்களும் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள் குறித்து ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் சரியாக விளையாடாத போதும் வீரர்கள் சிலரை அணிகள் தக்கவைத்துக்கொண்டுள்ளன. அவர்களைப் பார்க்கலாம்:

கெதர் ஜாதவ் (சிஎஸ்கே)

2018-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் கெதர் ஜாதவ். 2019 ஐபிஎல்-லில் 14 ஆட்டங்களில் விளையாடிய ஜாதவ், 169 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 95.85. ஒரே ஒரு அரை சதம் மட்டுமே எடுத்தார். அணி நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கு நடு வரிசை பேட்ஸ்மேன்களுக்கு உறுதுணையாக அவர் விளையாடவில்லை. 

ஏலத்தில் ரூ. 7.80 கோடிக்கு சிஎஸ்கே அவரைத் தேர்வு செய்தது. அணிக்குப் பயனில்லாமல் இருப்பதால் எப்படியும் இந்த வருடம் ஜாதவை நீக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பது தான் சிஎஸ்கே அணியின் தாரகமந்திரம். அதன் அடிப்படையில் இந்த வருடம் ஜாதவைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது சிஎஸ்கே அணி.

முகமது சிராஜ் (ஆர்சிபி)

கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய முகமது சிராஜின் பந்துவீச்சை ஆர்சிபி ரசிகர்களால் மறக்கவே முடியாது. 26 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள சிராஜ், 28 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 9.20. இதுதான் அவருடைய பெரிய பிரச்னை. 2019 ஐபிஎல்-லில் 9 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 9.55. இது எதுவும் ஆர்சிபி அணிக்குப் பிரச்னையில்லையா என ஆச்சர்யப்படுகிறார்கள் ரசிகர்கள்.

அடுத்த வருடமாவது ஆர்சிபி அணிக்குப் பயனுள்ள வீரராக இருப்பாரா சிராஜ்?

பசில் தம்பி (ஹைதராபாத்)

நம்பிக்கையான இளம் வீரர் தான். 2019 ஐபிஎல்-லில் 3 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய தம்பி, ஒரு விக்கெட்டும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். எகானமி - 9.16. இதுதவிர 2018-ல் இவருடைய எகானமி - 11.21. 2017-ல் 9.49. இப்படி ரன்களைக் கட்டுப்படுத்த முடியாத பசில் தம்பியை ஹைதராபாத் நிர்வாகம் எதற்காகத் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்கிற கேள்வி எழுகிறது. 

கலீல் அகமது (ஹைதராபாத்)

ஹைதராபாத் அணியின் ஆச்சர்யமூட்டும் மற்றொரு முடிவு. கலீல் அகமது இதுவரை தனக்கு அளித்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலும் இவருடைய பந்துவீச்சை வங்கதேச பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டார்கள். 2019 ஐபிஎல்-லில் 9 ஆட்டங்கள் விளையாடி 19 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் கடைசி ஓவர்களில் அதிகமாக ரன்கள் கொடுத்தார். இவருடைய எகானமி - 8.23. ஏற்கெனவே ஏராளமான வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஹைதராபாத் அணிக்கு கலீல் அகமதின் சேவை தேவையா என்பதுதான் கேள்வி. 

பவன் நெகி (ஆர்சிபி)

ஆர்சிபி அணியின் முடிவுகள் எப்போதுமே விவாதத்துக்கு உரியவை. இந்தமுறை கொத்தாக 12 வீரர்களை வெளியேற்றிய ஆர்சிபியால் சிராஜ், பவன் நெகியை வெளியேற்ற முடியவில்லை. 2019 ஐபிஎல்-லில் 7 ஆட்டங்களில் விளையாடிய நெகி, 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். எகானமி - 9.13. 2017-ம் வருடம் மட்டும் 12 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை எடுத்தார். மற்றபடி ஐபிஎல்-லில் நெகியால் இதுவரை பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. இருந்தும் ஆர்சிபி அணியும் கோலியும் நெகி மீது நம்பிக்கை வைத்து தக்கவைத்துக்கொண்டுள்ளது ஆச்சர்யத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com