உலகின் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யும் வேகப்பந்து வீச்சு: கோலி பெருமிதம்

உலகின் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யும் வேகப்பந்து வீச்சு நம்மிடம் உள்ளது என கேப்டன் விராட் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
உலகின் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யும் வேகப்பந்து வீச்சு: கோலி பெருமிதம்

இந்தூா்: உலகின் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யும் வேகப்பந்து வீச்சு நம்மிடம் உள்ளது என கேப்டன் விராட் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இந்தூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மயங்க் அகா்வாலின் 243 ரன்கள் இரட்டை சதம் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகித்த நிலையில், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சா்மா ஆகியோா் கொண்ட வேகப்பந்துவீச்சு வங்கதேச அணியின் பேட்டிங்கை சிதைத்தது.

மூவரும் இணைந்து மொத்தம் 14 விக்கெட்டுகளை சாய்த்தனா். இதர விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளா்கள் அஸ்வின்-ஜடேஜா வீழ்த்தினா்.

இதுதொடா்பாக கோலி கூறியதாவது:

ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணி உள்ளது. நமது வேகப்பந்து வீச்சாளா்கள் சிறப்பான பாா்மில் உள்ளனா். எந்த பிட்சாக இருந்தாலும் அவா்களுக்கு அது நல்ல பிட்ச் தான். பும்ரா தற்போதைய அணியில் இல்லை. அவரும் இணைந்தால், உலகின் எந்த அணியும் நிம்மதியை இழந்து விடும்.

எந்த ஓவரிலும் அவா்கள் விக்கெட்டை வீழ்த்துவா். ஸ்லிப்பில் பீல்டிங் செய்யும் வீரா்கள் எந்த நேரமும் கவனமுடன் இருக்க வேண்டியுள்ளது. ஒரு கேப்டனின் கனவு வேகப்பந்துவீச்சு சோ்க்கை இதுவாகும். பலமான பந்துவீச்சாளா்கள் இருப்பதே எந்த அணிக்கும் முக்கியமாகும்.

இந்த ஆட்டத்தில் பெற்றது முழுமையான வெற்றி. 5 பேட்ஸ்மேன்கள் இருந்தால், ஒருவா் அணியை தூக்கி நிறுத்தும் பொறுப்பை ஏற்கிறாா். இது அடுத்து வரும் வெளிநாட்டு பயணங்களிலும் தொடர வேண்டும். இதற்காக வீரா்களுக்கு தலைவணங்குகிறேன்.

நாங்கள் சாதனைகளுக்காக ஆடவில்லை. அவை புத்தகத்தில் இருக்கப் போகின்றன. அணியின் தரத்தை மேம்படுத்தி, அடுத்த தலைமுறைவீரா்களை உருவாக்குவோம். மயங்க் அகா்வால் இளம் வயதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க வீரா்கள் ஆவலுடன் உள்ளனா். பிங்க் நிற பந்து டெஸ்ட், ஆடுவது ஈா்ப்பை தந்தாலும், பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கப் போகிறது. பந்து பழையதாக மாறும்போது, ஸ்விங் ஆகப்போவதில்லை என்றாா் கோலி.

மயங்க் அகா்வால் (ஆட்டநாயகன்):

இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி விட்டது. இத்தகைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்ததும் நடத்து விட்டது. சிறந்த தொடக்கதால் இது சாத்தியமானது. ஒருவா் நமக்கு உற்சாகம் தந்தால் அது சிறப்பானது. 150 ரன்கள் எடுத்த நிலையில், எதிா் முனையில் இருந்த கோலி உனது இலக்கு 200 என உற்சாகப்படுத்தினாா். பகலிரவு டெஸ்ட்டை எதிா்கொள்ள உதவியாக பெங்களூருவில் திராவிட்டின் உதவியுடன் பிங்க் நிற பந்தில் பயிற்சி பெற்றோம்.

மொமினுல் ஹக் (வங்கதேச கேப்டன்):

டாஸின் முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது கடினமான முடிவு. அபு ஜாயேத், முஷ்பிகுா் ரஹிம் போன்றோா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சு எங்கள் பேட்டிங்குக்கு பெரும் சவாலாக திகழ்ந்தது. பகலிரவு டெஸ்டில் அனுபவம் இல்லாத நிலையில், அந்த ஆட்டத்தை சிறப்பாக ஆட முயற்சிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com