அது கிரிக்கெட்டே அல்ல: உலகக் கோப்பை முடிவு குறித்து நியூஸி. கேப்டன் விமரிசனம்

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனால் இன்னமும் அந்த இறுதிப் போட்டியை மறக்க முடியவில்லை. அந்த முடிவை விமரிசித்து அவர் பேசியதாவது...
அது கிரிக்கெட்டே அல்ல: உலகக் கோப்பை முடிவு குறித்து நியூஸி. கேப்டன் விமரிசனம்

2019 உலகக் கோப்பைப் போட்டி முடிவை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதேபோல விநோதமான விதிமுறையால் ஏற்பட்ட தோல்வியை நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனாலும் இன்னமும் மறக்க முடியவில்லை. 

பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. இரு அணிகளும் 50 ஓவர்கள் ஆடிமுடிந்த நிலையில் ஆட்டம் சமன் ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

எனினும் சூப்பர் ஓவர் வழியாக முடிவைக் கண்டடையாமல் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஐசிசியின் விதிமுறைக்குப் பலத்த கண்டனம் எழுந்தது. இதுபோன்ற தர்க்கம் இல்லாத விதிமுறைகளை மாற்றவேண்டும் என்றும் பல தரப்பிலிருந்தும் ஐசிசிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவர் விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இதுதொடர்பாகப் புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஓவரும் டை-யில் முடிவடைந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணியைத் தேர்வு செய்யும் பழைய நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, உலகக் கோப்பைப் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் முடிவு எட்டப்படும்வரை சூப்பர் ஓவர்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனால் இன்னமும் அந்த இறுதிப் போட்டியை மறக்க முடியவில்லை. அந்த முடிவை விமரிசித்து அவர் பேசியதாவது:

இதுபோல சூப்பர் ஓவரும் டை-யில் முடிவடையும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. இதுபோன்ற முடிவுகளை எப்படி எடுக்கிறார்கள் என அவ்வப்போது யோசிப்பேன். ஓர் அறையில் உட்கார்ந்துகொண்டு சில யோசனைகளைத் தெரிவித்து கடைசியில் இந்த முடிவை எடுத்துள்ளார்கள் என்றுதான் நினைப்பேன். ஆனால் சூப்பர் ஓவரும் டை ஆகி பவுண்டரி அடிப்படையில் வெற்றியாளரை நிர்ணயிப்பது என்பது அச்சமூட்டும் விஷயம். 

இது அந்த விதிமுறையில் உள்ள குறையை வெளிப்படுத்தியுள்ளது. அதுபோன்று இனி மீண்டும் நடக்காது. அந்த முடிவு என்பது கிரிக்கெட்டே அல்ல. அதை இரு அணிகளும் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதை ஏற்றுக்கொள்வது கடினம். எனினும் அந்த விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. 

அருமையான ஆட்டம் இது. நூற்றுக்கணக்கான ஆட்டங்கள் இருந்தாலும் இதுபோன்ற முடிவை யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். அது அப்படித்தான். விதிமுறைகள் அப்படித்தான் இருந்தன. அந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டதில் ஆச்சர்யம் இல்லை என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com