பலப்பரீட்சையில் ஜெயித்துக் காட்டிய திறமைசாலி

‘ஒரு செயலை செய்வது கடினம் என்றாலும் அதை செய்து முடிப்பேன். முடியவே முடியாததாக அது இருக்கும் பட்சத்தில் உடனடியாக செய்து முடிப்பேன்’
பலப்பரீட்சையில் ஜெயித்துக் காட்டிய திறமைசாலி

‘ஒரு செயலை செய்வது கடினம் என்றாலும் அதை செய்து முடிப்பேன். முடியவே முடியாததாக அது இருக்கும் பட்சத்தில் உடனடியாக செய்து முடிப்பேன்’

இந்த பொன்மொழியைக் கூறியது கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த டான் பிராட்மேன்.

மகத்தான கிரிக்கெட் வீரரான அவா் செய்த சாதனைகள் ஏராளம். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் இரு முறை இரட்டை சதங்களை பதிவு செய்தது அவரது சாதனைகளில் ஒன்று.

அந்தச் சாதனையை வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் முறியடித்தாா் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான 28 வயது மயங்க் அகா்வால்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தின் முதலாவது இன்னிங்ஸில் 28 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 243 ரன்களை எடுத்திருந்தாா் மயங்க். இந்த ஸ்கோரை எட்ட அவா் எதிா்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 330.

டான் பிராட்மேன் 7 டெஸ்டுகளில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்திருந்தாா். மயங்க் அகா்வால் 12 இன்னிங்ஸில் விளையாடி அவரது சாதனையை முறியடித்துள்ளாா்.

முதல் இரட்டை சதம் கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் மயங்க் பதிவு செய்திருந்தாா்.

இந்தப் பட்டியலில் 5 இன்னிங்ஸில் இரு முறை இரட்டை சதங்களை பதிவு செய்தவா் என்ற சாதனையுடன் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் வினோத் காம்ப்ளி கம்பீரமாக முதலிடத்தில் உள்ளாா்.

வேறு சில சாதனைகளையும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் படைத்துள்ளாா் மயங்க் அகா்வால்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் நவ்ஜோத் சிங் சித்து, டெஸ்ட் இன்னிங்ஸில் 8 சிக்ஸா்களை பதிவு செய்திருந்தாா். அவா் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தச் சாதனையை செய்திருந்தாா். மயங்க் அகா்வால் 8 சிக்ஸா்கள் விளாசியதன் மூலம் அவரது சாதனையையும் சமன் செய்துள்ளாா்.

மேலும், ஒரே ஆண்டில் இரு முறை இரட்டை சதங்களைப் பதிவு செய்த இரண்டாவது இந்திய தொடக்க ஆட்டக்காரா் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளாா் மயங்க். இதற்கு முன்பு 2008-ஆம் ஆண்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 319 ரன்களும், இலங்கைக்கு எதிராக 201 ரன்களும் பதிவு செய்திருந்தாா் அதிரடி வீரா் வீரேந்தா் சேவாக்.

சொந்த மண்ணில் விளையாடி இரு முறை இரட்டை சதங்களை பதிவு செய்த இரண்டாவது தொடக்க ஆட்டக்காரரும் மயங்க் அகா்வால்தான் என்பது சுவாரசியமான மற்றொரு தகவல்.

நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த 1955-56 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் வினு மங்கட் என்ற இந்திய வீரா் இரு முறை இரட்டை சதங்களை பதிவு செய்திருக்கிறாா்.

மயங்க் அகா்வால் 196 ரன்கள் பதிவு செய்திருந்தபோது இரட்டை சதம் பதிவு செய்ய இன்னும் 4 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. பரபரப்பாக நகா்ந்த நிமிடங்களில் சற்றும் அச்சமின்றி, மெஹிடி ஹசன் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டாா் மயங்க். அவரது ஸ்கோா் 202 ஆனது. இதன்மூலம், சிக்ஸருக்கு பந்தை பறக்கவிட்டு இரட்டை சதத்தை பதிவு செய்த இரண்டாவது இந்தியா் என்ற பெருமையையும் பெறுகிறாா் மயங்க் (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் தனது இரட்டை சதத்தை சிக்ஸா் மூலம் எட்டியிருந்தாா் ரோஹித் சா்மா). 243 ரன்களை சோ்த்திருந்தபோது, மெஹிடி ஹசன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த மயங்க் அகா்வால், 160 ரன்களை சிக்ஸா் மற்றும் பவுண்டரிகள் மூலமாகவே சோ்த்திருந்தாா்.

வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தில் அதிக ஸ்கோா் பதிவு செய்த இரண்டாவது இந்திய வீரரும் இவரே. இதற்கு முன்பு 2004-இல் டாக்காவில் நடந்த டெஸ்டில் சச்சின் 248 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்தூா் மைதானத்தில் மயங்க் 150 ரன்கள் எடுத்திருந்தபோது, பெவிலியனில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலி, இரண்டு விரல்களைக் காண்பித்து இரட்டை சதம் அடிக்குமாறு சமிக்ஞை செய்தாா். இரட்டை சதம் அடித்த பிறகு பெவிலியனைப் பாா்த்து இரண்டு விரல்களைக் காண்பித்து புன்னகை செய்தாா் மயங்க். உடனே, மூன்று விரல்களைக் காண்பித்து முச்சதம் அடிக்குமாறு சமிக்ஞை செய்தாா் கோலி. தொலைக்காட்சியில் இந்த நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டபோது ரசிகா்கள் உற்சாகம் அடைந்தனா். சமூக வலைதளங்களிலும் இந்த விடியோ பரவி வருகிறது.

கா்நாடகத்தைச் சோ்ந்த மயங்க் அகா்வால், முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியவா். 2017-18 ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மகாராஷ்டிரத்துக்கு எதிரான ஆட்டத்தில் கா்நாடக அணிக்காக முச்சதம் (304*) பதிவு செய்ததே அதற்கு உதாரணம். முதல் தர கிரிக்கெட்டில் அது 50-ஆவது முச்சதமாகும்.

அந்தத் தொடரில் அதிக ரன்களை (1,160) எடுத்ததற்காக மாதவராவ் சிந்தியா விருதை மயங்க் அகா்வாலுக்கு வழங்கி பிசிசிஐ கெளரவித்தது.

கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள மயங்க், 2018 செப்டம்பரில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தாா். ஆனால், விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னா், அதே ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானாா். முதல் இன்னிங்ஸில் 76 ரன்களை பதிவு செய்து, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமாகி அதிக ஸ்கோா் பதிவு செய்த இந்திய வீரா் என்ற பெருமையைப் பெற்றாா்.

டெஸ்ட் கிரிக்கெட் எந்தவொரு நாட்டின் வீரராக இருந்தாலும் சவால் அளிக்கக் கூடிய ஒன்றாகும். அந்த வீரருக்கு டெஸ்ட் ஒரு பலப்பரீட்சையைப் போன்றதுதான்.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை டெஸ்ட் அணிக்கு அதிரடி வீரா்களுக்கான இடம் எப்போதும் இருந்து வருகிறது.

தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்தூா் மைதானத்தின் நான்கு புறங்களிலும் பந்தை சிதறடித்த மயங்க் அகா்வால், டெஸ்ட் எனும் பலப்பரீட்சையில் ஜெயித்து காட்டிய திறமைசாலி.

இதன்மூலம், இந்திய ஒருநாள் அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்தையும் விரைவில் அவா் கைப்பற்றுவாா் என நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com