பொழுதுபோக்குக்காக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடக் கூடாது: பகலிரவு டெஸ்ட் குறித்து விராட் கோலி

ரசிகர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் பிடிக்காவிட்டால் அதை விரும்பும்படி அழுத்தம் தரக்கூடாது.
பொழுதுபோக்குக்காக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடக் கூடாது: பகலிரவு டெஸ்ட் குறித்து விராட் கோலி

இந்தியா - வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் இந்தியா எதிா்கொள்ளவிருக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாகும். இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்து இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

டெஸ்ட் ஆட்டம் என்பது பகலிரவில் மட்டுமே நடைபெறும் ஒன்றாக இருக்கக் கூடாது. எனில் காலை வேளையில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்படும்போது உண்டாகும் பதற்றத்தை நீங்கள் இழந்துவிடுவீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரசியத்தைக் கொண்டு வரலாம். அதேசமயம் பொழுதுபோக்குக்காக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடக் கூடாது. 

ஒரு நாளின் ஒரு பகுதியைத் தாக்குப் பிடித்து விளையாடும் பேட்ஸ்மேன், ஒரு பேட்ஸ்மேனை வீழ்த்தும் பந்துவீச்சாளரின் திட்டம்... இவைதான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குப் பொழுதுபோக்காக இருக்கவேண்டும். இது ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால், அது சரியல்ல. ரசிகர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் பிடிக்காவிட்டால் அதை விரும்பும்படி அழுத்தம் தரக்கூடாது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் போட்டி மனப்பானமையை விரும்பும் ரசிகர்கள் தான் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்க வரவேண்டும். ஏனெனில் அவர்களுக்குத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மை புரியும்.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட் குறித்து ஏற்பட்டுள்ள பரபரப்பு நல்லதுதான். கொல்கத்தாவில் முதல் மூன்று, நான்கு நாள்களுக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது அபாரம். அதேசமயம் ராகுல் டிராவிட் சொன்னதுபோல இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என நிரந்தரமான ஓர் அட்டவணை இருக்கவேண்டும். அப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்க ரசிகர்கள் முன்கூட்டியே தயாராவார்கள். பதிலாக, எப்போது டெஸ்ட் ஆட்டம் நடக்கும் எனத் தெரியாது என்கிற நிலைமை இருக்கக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என நிரந்தர மைதானங்கள், அட்டவணை எல்லாம் இருந்தால் அது ரசிகர்களுக்குச் சாதகமானதாக இருக்கும். எனவே பகலிரவு டெஸ்ட் என்பது எப்போதாவது இருக்கலாம். அதுவே வழக்கமான நடைமுறையாகிவிடக் கூடாது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com