வங்கதேசத்துடன் இன்று முதல் பகலிரவு டெஸ்ட்: வெற்றியுடன் தொடங்க இந்தியா முனைப்பு

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் உற்சாகத்தில் உள்ளது இந்தியா.
வங்கதேசத்துடன் இன்று முதல் பகலிரவு டெஸ்ட்: வெற்றியுடன் தொடங்க இந்தியா முனைப்பு

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் உற்சாகத்தில் உள்ளது இந்தியா.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த 2012-ஆம் ஆண்டு முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடத்த அனுமதி அளித்தது. அதன்படி 2015-இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் இந்தியா, வங்கதேசம் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற அனுபவத்தை கொண்டுள்ளன.
11 பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள்: இதுவரை உலகம் முழுவதும் 11 பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஓவல் மைதானம் நிரந்தர பகலிரவு டெஸ்ட் மைதானமாக உள்ளது. வரும் 2020-21-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்தியா டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக பகலிரவு ஆட்டத்தை இடம் பெறச் செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் கெவின் ராபர்ட்ஸ் முயற்சித்து வருகிறார். ஐசிசி விதிகளின்படி ஒரு நாட்டில் சுற்றுப் பயணம் செய்யும் அணி உள்ளூர் வாரியத்தின் அட்டவணை பரிந்துரைகளை நிராகரிக்கலாம். இந்த விதிகள் விரைவில் மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்தியா தயக்கம்:
ஆனால் இந்திய அணி நிர்வாகம் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க தயக்கம் காண்பித்தது. கடந்த 2018-இல் ஆஸ்திரேலிய தொடரில் அடிலெய்ட் நகரில் பகலிரவு ஆட்டமாக நடத்தலாம் என அந்நாட்டு வாரியம் கேட்டபோது, பிசிசிஐ மறுத்து விட்டது. குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆடுவது தொடர்பாக முடிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கங்குலியால் சாத்தியம்:
இந்நிலையில் பிசிசிஐ புதிய தலைவராக பதவியேற்ற செüரவ் கங்குலி, முதன்முதலாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை கொல்கத்தாவில் நடத்த வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்டார். தயக்கம் காண்பித்த கோலியையும் இதற்கு சம்மதிக்க வைத்தார். அதன்படி வங்கதேசத்துடன் கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது ஆட்டம் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தும் பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை சிஏபி செய்துள்ளது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கிடைக்கும். அதிக பார்வையாளர்கள் திரண்டு வருவர் எனக் கூறினார் கங்குலி. அதன்படி முதல் நான்கு நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. 

எழுச்சி பெறுமா வங்கதேசம்
வங்கதேச அணியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே தொய்வு காணப்படுகிறது. இந்திய அணிக்கு எதிராக அவர்கள் ஆட்டம் சோபிக்காதது கவலை தருவதாக உள்ளது. அபு ஜாயேத், முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட இருவர் மட்டுமே குறிப்பிடும்படியாக ஆடினர். வழக்கமாக சிறப்பாக ஆடும் லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், மஹ்முத்துல்லா, இம்ருல் கைய்ஸ் ஆகியோர் பார்முக்கு திரும்புவார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வலுவான பேட்டிங்
அதே நேரத்தில் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, கேப்டன் கோலி, ரஹானே, ரித்திமான் சாஹா, புஜாரா, அஸ்வின், ஜடேஜா என வலுவான பேட்டிங் வரிசையுடன் உள்ளது இந்தியா.

12-ஆவது உள்ளூர் தொடர் வெற்றி
கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடி உள்ளூரில் தொடர்ந்து 12-ஆவது டெஸ்ட் தொடரை கைப்பற்றும் தீவிரத்தில் உள்ளது இந்தியா.  இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 3 நாள்கள் முடிவிலேயே ஒரு இன்னிங்ஸ், 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

வேகப்பந்து மும்மூர்த்திகள்
முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சு மும்மூர்த்திகளான இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவின் அபார பந்துவீச்சால் நிலைகுலைந்தது வங்கதேசத்தின் பேட்டிங். மூவரும் இணைந்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா மீதமுள்ள விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com