கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறும் வங்கதேச அணி!

23 ஓவர்களின் முடிவில் வங்கதேச அணி, 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது...  
கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறும் வங்கதேச அணி!

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் (பிங்க் டெஸ்ட்) இந்தியாவின் அற்புதப் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச அணி 106 ரன்களை மட்டுமே சோ்த்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். பின்னா் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்திருந்தது.

2-ம் நாள் ஆட்டத்தை பிரபல செஸ் வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்தும் மேக்னஸ் கார்ல்சனும் தொடங்கி வைத்தார்கள். கோலியும் ரஹானேவும் கவனமாக விளையாடி ஆரம்பத்தில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு ரன்கள் சேர்த்தார்கள். 65-வது பந்தில் அரை சதமெடுத்தார் ரஹானே. கடந்த நான்கு இன்னிங்ஸ்களிலும் அவர் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் அதிக ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தைஜுல் இஸ்லாம் பந்தில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார் ரஹானே. அடுத்ததாகக் களமிறங்கினார் ஜடேஜா. பிறகு 159 பந்துகளில், பகலிரவு டெஸ்டுகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்தார் கோலி. இது அவருடைய 27-வது டெஸ்ட் சதம். கேப்டனாக 20-வது சதம். அடுத்தச் சில நிமிடங்களில் அபு ஜெயத்தின் ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை அடித்து அசத்தினார் கோலி. 

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 76 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. கோலி 130, ஜடேஜா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, எதிர்கொண்ட 2-வது பந்திலேயே அபு ஜெயத் பந்துவீச்சில் போல்ட் ஆனார்  ஜடேஜா. இதன்பிறகு இளஞ்சிவப்பு பந்தும் சூழலும் வங்கதேச அணிக்கு மிகவும் உதவியது. இதைப் பயன்படுத்திக்கொண்ட பந்துவீச்சாளர்கள் கடகடவென இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். விராட் கோலி, தைஜுல் இஸ்லாமின் அட்டகாசமான கேட்சினால் எபாதத் ஹுசைனின் பந்துவீச்சில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்த அஸ்வின், 9 ரன்களில் அல் அமின் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே உமேஷ் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் அபு ஜெயத் பந்துவீச்சிலும் இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் அல் அமின் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள்.

இதையடுத்து இந்திய அணியின் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் கோலி. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்துள்ளது. சஹா 17, ஷமி 10 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வங்கதேச அணியின் முதல் ஓவரிலேயே ஷத்மன் இஸ்லாம் ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட், இஷாந்த் சர்மாவுக்குக் கொண்டாட்டமாக அமைந்துவிட்டது. மொமினுல் ஹக்கையும் அடுத்ததாக அவர் டக் அவுட் செய்தார். இதனால் 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் பந்துவீசிய முதல் ஓவரிலேயே முகமது மிதுனை 6 ரன்களில் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் இம்ருல் கைஸ், 5 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 13 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. 

இதன்பிறகு ஜோடி சேர்ந்த முஷ்ஃபிகுர் ரஹிமும் மெஹ்முதுல்லாவும் தாக்குபிடித்து விளையாடினார்கள். விரைவாக 39 ரன்கள் சேர்ந்த மெஹ்முதுல்லா, காயம் காரணமாக ரிடையர்ட் ஹட்ர் முறையில் வெளியேறினார். இதன்பிறகு மெஹிதி ஹசன் களமிறங்கினார். 23 ஓவர்களின் முடிவில் வங்கதேச அணி, 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com