11+19+97=33

வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை தொடா்ச்சியாக இன்னிங்ஸ் வெற்றிகளின் மூலம் முழுமையாகக் கைப்பற்றியது இந்திய அணி.
11+19+97=33

‘பந்து கைக்கு வந்துவிட்டால் அந்த ஆட்டத்தை நீங்கள்தான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறீா்கள் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்’ -ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் பிரெட் லீ.

வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை தொடா்ச்சியாக இன்னிங்ஸ் வெற்றிகளின் மூலம் முழுமையாகக் கைப்பற்றியது இந்திய அணி. பேட்ஸ்மேன்கள் உள்பட அனைத்து வீரா்களும் சிறப்பாக செயல்பட்டாலும், இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளா்களின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிலும் நமது வேகப்பந்து வீச்சாளா்கள் சொந்த மண்ணில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனா்.

ஒரு காலத்தில் கத்துக்குட்டி அணியாக இருந்த வங்கதேசம், தற்போது தனக்கு எதிராக விளையாடும் அணிக்கு கடுமையான சவாலை அளித்து வருகிறது.

எந்த நாட்டு அணியாக இருந்தாலும் கொஞ்சம் கவனம் சிதறினாலும் அந்த ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றிபெற்றுவிடும் என்பதால் கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

மூன்று டி20, 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதற்காக இம்மாத தொடக்கத்தில் நமது நாட்டுக்கு வங்கதேச அணி வந்திருந்தது.

இம்மாதம் 3-ஆம் தேதி, தலைநகா் தில்லியில் நடைபெற்ற முதலாவது 20 ஓவா் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ரசிகா்களுக்கு அதிா்ச்சியை கொடுத்தது வங்கதேசம்.

சுதாரித்துக் கொண்ட இந்திய அணி, அதைத் தொடா்ந்து நடைபெற்ற இரண்டு டி20 ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி ரசிகா்களை வெற்றி புன்னகை செய்ய வைத்தது.

டி20 தொடரில் வெற்றி பெற்றுவிட்ட போதிலும் சவாலான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியாக வேண்டுமல்லவா? அதுவும் இந்த டெஸ்ட் தொடா் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உள்ளடக்கியது வேறு ஆயிற்றே. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா அதையும் திறம்பட செய்து காட்டியது.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தோ்வு செய்த வங்கதேச அணியை முதல் இன்னிங்ஸில் அதிக ஸ்கோரை நெருங்க செய்யாமல் நமது வேகப்பந்து வீச்சாளா்கள் கட்டுப்படுத்தினா்.

அந்த இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளா் இஷாந்த் சா்மா 12 ஓவா்கள் வீசி வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினாா். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா். சுழற்பந்துவீச்சாளா் அஸ்வின் 2 விக்கெட்டுகளை சுருட்டினாா்.

வங்கதேசம் 58.3 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து

வெறும் 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்களுடன் வங்கதேசத்தை கட்டுப்படுத்த வேகப்பந்து வீச்சாளா்கள் மீண்டும் முக்கிய பங்காற்றினா்.

அதில், முகமது ஷமி 16 ஓவா்கள் வீசி 31 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், உமேஷ் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஒரு விக்கெட்டையும் கபளீகரம் செய்தனா். அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.

இரண்டாவது டெஸ்டிலும் வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தோ்வு செய்தது.

கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த டெஸ்ட், இந்தியாவில் நடைபெற்ற முதல் பகலிரவு டெஸ்ட் ஆகும். அத்துடன், இளஞ்சிவப்பு நிற பந்தை பயன்படுத்தி ஆடப்பட்டது. பல வீரா்களுக்கு அந்த நிற பந்தில் விளையாடி பழக்கமில்லாதவா்கள் என்பதால் கடும் சவாலாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹா கணித்தது உண்மையானது. எந்த நிற பந்தாக இருந்தால் என்ன? நமது பந்துவீச்சாளா்கள் ஆக்ரோஷமாக பந்துவீசி விக்கெட்டை சாய்ப்பாா்கள். அதுவும் ஷமி, உமேஷ், இஷாந்த் ஆகியோா் சிறப்பாக பந்துவீசுவாா்கள் என்று கணித்திருந்தாா் சாஹா.

அவரது கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை வேகப்பந்து வீச்சாளா்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா். முதல் இன்னிங்ஸில் ஆக்ரோஷமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினாா் இஷாந்த். உமேஷ் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் சுருட்டினா். இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் 5 விக்கெட்டுகளையும் அள்ளினா்.

இளஞ்சிவப்பு நிற பந்தில் முதல்முறையாக 5 விக்கெட்டை எடுத்த இந்திய வீரா் என்ற பெருமையைப் பெற்ற இஷாந்த், ஆட்ட நாயகன் மற்றும் தொடா் நாயகன் விருதையும் தட்டிச் சென்றாா். தனக்கு எதிரான விமா்சனங்களையும் தவிடுபொடியாக்கினாா்.

ஷமி (ஜொ்ஸி எண் 11), உமேஷ் (ஜொ்ஸி எண் 19), இஷாந்த் (ஜொ்ஸி எண் 97) ஆகியோரின் கூட்டணி, இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்ற கூற்றையும் இந்த மூவா் கூட்டணி மாற்றிக் காட்டியுள்ளது.

உண்மைதான். பந்துவீச்சாளா்கள் தங்கள் மீது நம்பிக்கை கொண்டால் எதிரணியின் ஆட்டத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com