12 பவுண்டரிகள், 5 சிக்ஸர்: தொடக்க வீரராகக் களமிறங்கி சதமடித்து அசத்தினார் ரோஹித் சர்மா!

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தது...
12 பவுண்டரிகள், 5 சிக்ஸர்: தொடக்க வீரராகக் களமிறங்கி சதமடித்து அசத்தினார் ரோஹித் சர்மா!

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணியில் முத்துசாமி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம்  ஆகியுள்ளார். 

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். இருவரும் மிகவும் கவனமாக விளையாடி முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தார்கள். 19 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடிய ரோஹித், மஹாராஜ் வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தில் ஏறி வந்து சிக்ஸர் அடித்தார். அடுத்தச் சில ஓவர்கள் கழித்து பீடிட் பந்தில் சிக்ஸர் அடித்தார் மயங்க். அதே பந்துவீச்சாளர் பந்தில் தானும் ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ரோஹித் சர்மா. இதனால் 25-வது ஓவரின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. ரபடா, பிலாண்டர் பந்துவீச்சைப் பக்குவமாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா, சுழற்பந்துவீச்சில் அதிக ரன்கள் எடுத்தார். 

84 பந்துகளில் தொடக்க வீரராக தனது முதல் அரை சதத்தை எடுத்தார் ரோஹித் சர்மா. இது இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா எடுத்துள்ள தொடர்ச்சியான ஆறாவது அரை சதம். இதனால் தான் அவர் இந்த டெஸ்டில் எப்படியாவது விளையாட வேண்டும் என்று கோலியும் சாஸ்திரியும் முடிவெடுத்து அவரைத் தொடக்க வீரராகக் களமிறக்கியுள்ளார்கள். அவர்களின் முடிவு மிகச்சரியானது என்பதைத் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்தார் ரோஹித் சர்மா. 

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 52, மயங்க் அகர்வால் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு அருமையான தொடக்கம் அமைந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ரோஹித் - மயங்க் ஜோடி 100 ரன்கள் கூட்டணியை அடைந்தது. புதிய கூட்டணியாக இருந்தாலும் இந்திய அணிக்கு இருவரும் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். 2018 ஜூன் மாதம் தவனும் முரளி விஜய்யும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 168 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். அதன்பிறகு இந்தியத் தொடக்க வீரர்களின் 100 ரன்கள் கூட்டணி இப்போதுதான் கிடைத்துள்ளது.

மஹாராஜ் பந்தில் சிக்ஸர் அடித்து 114 பந்துகளில் அரை சதம் எடுத்தார் மயங்க் அகர்வால். இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் தொடக்க வீரராக தனது இடத்தை அவர் மேலும் வலுவாக்கியுள்ளார். 49-வது ஓவரில் இந்தக் கூட்டணி 150 ரன்களை எடுத்தது. சதத்தை நெருங்கியபோதும் பயமின்றி விளையாடினார் ரோஹித். பீடிட் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை அடித்தார். பிறகு, 154 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஹித் சர்மா. தொடக்க வீரராக அவர் எடுக்கும் முதல் சதம் இது. 59-வது ஓவரில் இந்தக் கூட்டணி 200 ரன்களை எட்டியது.

2015 ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தவனும் முரளி விஜய்யும் முதல் விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தார்கள். அதன்பிறகு இந்த டெஸ்டில்தான் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 200 ரன்களுக்குக் கூட்டணி அமைத்துள்ளார்கள். இத்தனைக்கும் இது புதிய கூட்டணி என்பது இதன் பங்களிப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. 

மழை அச்சுறுத்தல் காரணமாக சில நிமிடங்களுக்கு முன்னதாகவே தேநீர் இடைவேளைக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் நடுவர்கள். முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 115, மயங்க் அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதன்பிறகு மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடித்துவைக்கப்பட்டது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் நாளையும் தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com